அந்த ஒரு விஷயம்தான் கவலை அளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

Share this News:

சென்னை (14 ஆக 2021): தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்

பொது நிதிநிலை அறிக்கையைத் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (13.08.2021) சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், வேளாண்துறை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”100 நாட்கள் ஆட்சி குறித்து சபையில் இருக்கும் நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு, அடுத்துவரும் காலம் பற்றிய நினைப்பே அதிகம் இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கடந்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவிற்கு வாக்களிப்பீர்கள்.

இங்கு படமாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் கலைஞர் சொன்ன ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற வாசகம் இன்னமும் என் மனதில் ஆழமாக இருக்கிறது. அந்தப் பெயரை காலம் முழுக்க காப்பாத்திட வேண்டும் என்ற எண்ணம்தான் என்னிடம் இருக்கிறது.

தமிழகம் இழந்த பெருமையை எங்களால் மீட்டெடுக்க முடியும் என நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் இருந்தது. நிதிநிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலைதரும் வகையில் இருக்கிறது.

அதையும் விரைந்து சீர் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவோம். இந்தப் பெரும் பொறுப்பை என் தோள்களில் சுமக்க தயாராகிவிட்டேன். நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு எனது பயணத்தை தொடர்வேன்” என்றார்.


Share this News:

Leave a Reply