அதென்ன சீமான் இப்படி சொல்லிட்டார் – அப்படின்னா அதிமுகவுடைய நிலை?

Share this News:

சென்னை (30 டிச 2020): திமுகவுக்கு சரியான போட்டி நாம் தமிழர்தான் அதிமுகவல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து இருந்தாலும் எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக பலர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது டுவிட்டரிலும் பதிவு செய்து இருந்தேன். அவரும், அவரது குடும்பத்தினரும் கருதுவது போல அவரது உடல் நலம் மிகவும் முதன்மையானது.
இதனை நான் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். கடந்த காலங்களில் ரஜினி ரசிகனாக இருந்துள்ளேன். அரசியல் பயணத்தில் கடும் சொற்களை பயன்படுத்தி உள்ளேன். அது அவரையும், குடும்பத்தினரையும், ரசிகர்களையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த்.

ரஜினி மிகச்சிறந்த திரை ஆளுமை கொண்டவர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிய கண்டம் முழுவது அவரது புகழ் வெளிச்சம் பரவி கிடக்கிறது. தமிழ் மக்கள் அவரை பெரிதும் கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் அவரை கொண்டாடுவார்கள். அரசியல் அவருக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் எடுத்த முடிவை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

நாங்கள் கடுமையாக எதிர்த்ததால்தான் ரஜினி இந்த முடிவை எடுத்தாக கருத முடியாது. தலைவன் என்பவன் தண்ணீரில் தன்னையே கரைத்துக் கொள்பவனாகவும், மெழு குவர்த்தியாக தன்னையே உருக்கி வெளிச்சம் தருபவனாகவும் இருக்க வேண்டும். அதற்கு சினிமா புகழ் வெளிச்சம் மட்டும் போதாது.

ரஜினி அரசியலுக்கு வராததற்கு அவரது பிள்ளைகள் இருவரும், ‘‘வேண்டாம் பா’’ என்று சொன்னதே காரணம் என்று எனக்கு கூறினார்கள். இளம் வயதிலேயே அமைதி, நிம்மதியை தேடி சென்றவர். இப்போது அவருக்கு கூடுதலாக நிம்மதியும் அமைதியும் தேவைப்படும். அரசியலில் உள் கட்சி பிரச்சினையையே சமாளிக்க முடியாது.

என்னை மாதிரி காட்டானாலேயே சமாளிக்க முடியவில்லை. ரஜினியால் நிச்சயமாக சமாளிக்க முடியாது. அரசியலில் இறக்கி விட்டு விட்டு எல்லோரும் திட்டுவார்கள், அதனை அவரால் தாங்க முடியாது. அதனால்தான் அரசியல் வேண்டாம் என்று கூறினேன். நடிகர்களை எதிர்ப்பது, நாம் தமிழர் கட்சியின் கொள்கை இல்லை.

வருகிற தேர்தலில் முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன். எந்த தொகுதியில் அவர் களம் இறங்கினாலும் அங்கு நான் போட்டியிடுவது உறுதி. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி. அ.தி.மு.க. எதிர்க்க வேண்டிய கட்சியே இல்லை.

இவ்வாறு சீமான் கூறினார்.


Share this News:

Leave a Reply