கொடுமையிலும் கொடுமை – திமுக மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Share this News:

மதுரை (12 டிச 2022): மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜூ, சென்னை நகர மேயர் காரில் தொங்கிக் கொண்டு பயணித்ததால், திமுகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார்.

கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை! மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவு போட்டால் அவ்வளவுதான். மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

அதிமுக ஒன்றுபட்ட இயக்கம். அதிமுகவில் இருந்து ஒரு சிலர் விலகிப் போயிருக்கலாம். அதைப்பற்றி நாங்கள் பொருட்படுத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை.

தேர்தல் வரும் போகும். நாங்கள் மக்கள் நலனுக்காகதான் போராடி வருகிறோம். திமுக ஒரு கம்பெனிதான். குடும்பம்தான் கழகம். குடும்பத்தினர்தான் தலைவர். திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார் என்ற தகவல், பெரிய விஷயமே இல்லை.

ஏனெனில், ஏற்கனவே தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் ஆகியோர் செயல்படுகின்றனர். திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் யாரும் பொருட்படுத்த மாட்டோம். அதிமுகவின் நோக்கம் தெளிவானது. எங்களின் எண்ணம் உயர்வானது. திமுக மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது.”

இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply