அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் நாடார் சமூகம்!

Share this News:

சென்னை (24 மே 2020): அதிமுகவில் முதல்வர் எடப்பாடியின் நாடார் எதிர்ப்பு கொள்கை நாடார் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவது குறித்தும் பெரிய மாவட்டங்களை பிரிப்பது பற்றியும் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து கடந்த மாதம் பறிக்கப்பட்ட விருதுநகர் மா.செ. பதவி, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அதிமுக நிர்வாக பதவிகள் ஆகியவைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை பிரித்து ஒரு மாவட்டத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை செயலாளராக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும், எடப்பாடியின் நாடார் விரோத போக்கிற்கு எதிராக நாடார் சமூகத்தினர் அண்மைக்காலமாக, போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், அரசியல் ரீதியாக எந்தெந்த வகைகளிலெல்லாம் நாடார் சமூகத்தினரை எடப்பாடி ஓரங்கட்டுகிறார் என்பதை நாடார் சமூகத்தினரிடம் பிரச்சாரம் செய்து வருவதுடன், நாடார், சாணார், கிராமணி, மூப்பர் ஆகிய பிரிவினரை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் பணியிலிலும் குதித்துள்ளார்.

இதனால் எடப்பாடிக்கு எதிராக நாடார் சமூகமும் அதன் சார்ந்த பிரிவினரும் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து வருகிறார்கள். இதனை அறிந்துள்ள எடப்பாடி, புதிதாக ஒரு நாடாரை அமைச்சராக்குவதற்கு பதிலாக நாடார் சமூகத்தினரான மாஃபாவுக்கு கூடுதலாக ஒரு இலாகாவை ஒதுக்க முடிவு செய்திருக்கிறாராம். இதனால் அமைச்சரவை இலாகாக்கள் விரைவில் மாற்றப்படவிருக்கிறது என கூறப்படுகிறது.


Share this News: