துபாயில் கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்து தனியே தமிழ்நாடு வந்த கைக்குழந்தை!

Share this News:

திருச்சி (18 ஜுன் 2021): துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் உயிரிழந்த நிலையில், அவருடன் வசித்த குழந்தை நேற்று திருச்சி வந்தடைந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன் (38) – பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இதில், முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டது. குடும்ப வறுமை காரணமாக தவித்துவந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வேலை தேடி மனைவி பாரதி மூன்றாவது கைக்குழந்தையான தேவேஷ் உடன் துபாய்க்குச் சென்றுள்ளார்.

அங்கு ஒருமாத காலமாக வீட்டு வேலை செய்துவந்த நிலையில், கடந்த மே மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மே 29ஆம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தாய் பாரதி உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை தேவேஷ் மட்டும் துபாயில் தவித்து வந்துள்ளது. இதனையறிந்த துபாய் திமுக நகர அமைப்பாளர் எஸ்.எஸ். முகமது மீரான், அங்குள்ள இந்திய தூதரகத்திற்குத் தகவல் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, துபாயிலிருந்து பயணி ஒருவரின் உதவியுடன் கைக்குழந்தை தேவேஷ் நேற்று (17.06.2021) மாலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

கள்ளக்குறிச்சியில் இருந்து தந்தை வேலனும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து தன்னுடைய குழந்தையைப் பெற்றுக் கொண்டு கதறியழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.


Share this News:

Leave a Reply