கொரோனா பாதிப்பால் சென்னைக்கு நிகரான மதுரை!

Share this News:

சென்னை (04 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளன.

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, சென்னை உள்ளிட்ட தலைநகரங்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடீயாக மதுரை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா பாதிப்பு துவங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் மதுரையில் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான் துவங்கியது. 500ஐ தொட்டது தான் தாமதம், ‘ஜெட்’ வேகத்தில் 3 ஆயிரத்தை கடந்துவிட்டது.

சென்னையின் மக்கள் தொகை, அடர்த்தி ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் மதுரையில் மக்கள் தொகை, அடர்த்தி பல மடங்கு குறைவு. மதுரையில் 100 பேர் பாதித்தால் சென்னையில் 1000 பேர் பாதிப்பதற்கு சமம். ஆனால் சென்னைக்கு இணையாக மதுரையிலும் பாதிப்பு வேகம் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அதாவது ஏப்.,21ல் சென்னை பாதிப்பு 350 ஆக இருந்தது. 11 நாள் கழித்து 1000ஐ தொட்டது. மதுரையில் ஜூன் 10ல் 350 ஆக பாதிப்பு இருந்தது. ஆயிரத்தை தொட 15 நாள் தேவைப்பட்டது. அதன் பின் ஏற்பட்ட மாற்றம் தான் அதிர்ச்சி தருகிறது. மே 3ல் 1400 ஆக இருந்த சென்னை பாதிப்பு, அடுத்த 5 நாளில் 3 ஆயிரத்தை கடந்தது. அதே போன்று ஜூன் 26ல் 1400 ஆக இருந்த மதுரை பாதிப்பு, அதே 5 நாளில் 3 ஆயிரத்தை தொட்டுவிட்டது.

மதுரையில் இறப்பு வீதமும் வேகமெடுத்துள்ளது. அதாவது, சென்னையில் பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்த போது, அங்கு தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. ஆனால் தற்போது மதுரை அதே 3 ஆயிரம் பாதிப்பை கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை விட ஒரு மடங்கு அதிகமாகும்.


Share this News: