தஞ்சை மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட ராணுவ வீரரை ராணுவத்திலிருந்து நீக்க கோரிக்கை!

Share this News:

தஞ்சாவூர் (16 ஜன 2023): தஞ்சாவூர் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியவர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் அன்சர் பள்ளிவாசலில் நேற்று அதிகாலையில் தற்சமயம் இராணுவத்தில் பணி புரியும் தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா (த/பெ ராஜேந்திரன்) என்பவர் தொழுகைக்கான அழைப்பு ஒலிவாங்கியில் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து பள்ளிவாசல் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

காலணியுடன் பள்ளிவாசலுக்குள் சென்று அதன் புனிதத் தன்மையை களங்கப்படுத்த முயன்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்தவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் ஒரு குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும், காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இராணுவ வீரர் கைது செய்யப் பட்டுள்ளார். அத்துமீறி நுழைதல், வழிப்பாட்டு தலத்தை அசுத்தப் படுத்துதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உட்பட இந்திய தண்டனை சட்டத்தின் ஏழு பிரிவுகளின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

உரிய முறையில் நடவடிக்கை எடுத்து அமைதியை சீர்குலைக்க முயன்ற தேசிங்கு ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய தேசிங்கு ராஜாவை இராணுவ பணியிலிருந்து நீக்கப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்!”

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply