நோன்பு கஞ்சிக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது – இந்து முன்னணி நீதிமன்றத்தில் மனு!

Share this News:

சென்னை (24 ஏப் 2020): நோன்பு கஞ்சிக்காக அரிசி வழங்குவதை அரசு நிறுத்தக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

ரம்ஜான் நோன்பு நாளை முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் என தெரிவித்தது. அதன்படி, 2895 பள்ளிவாசல்களுக்கு 5440 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பு செயலாளர் குத்தாலநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்து இருப்பது ஏற்க கூடியதாக இல்லை என்பதால், ரம்ஜான் நோன்புக்காக அரிசி வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமன கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மே 7ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Share this News:

Leave a Reply