கொரோனா பரவலால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையா? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Share this News:

சென்னை (22 மார்ச் 2021): கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

, தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது, கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை.எனவே, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் .சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இராண்டாவது அலையாக இருக்கலாம். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் நடைமுறைகள், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது. எனவே, பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க முடியாது. அதேசமயம், பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி மனித விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக, அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Share this News:

Leave a Reply