ரிலாக்ஸ் ஆகும் சென்னை – டென்ஷன் ஆகும் மதுரை!

Share this News:

சென்னை (10 ஜூலை 2020): தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருந்தாலும் மதுரையில் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டுள்ளது.

சென்னையில் தினமும் 2,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது 1,200 வாக்கில் உள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது.

மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. அதாவது ஜூன் 23 ஆம் தேதி மதுரையில் 988 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அங்கு 5,299 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இந்தக் காலக்கட்டத்தில், சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளன. தற்போது திருவள்ளூரில் 5,877 ஆக்டிவ் கேஸ்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,386 ஆக்டிவ் கேஸ்களும் உள்ளன.

அதேவேளை சென்னையில் செய்வது போல, மற்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாடும் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 78,161 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,652 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News: