தமிழகத்தில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது!

Share this News:

சென்னை (08 செப் 2020): தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து 50 சதவீதம் மற்றும் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொது பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களாக பஸ்கள் அந்தந்த பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. டிரைவர்-கண்டக்டர்களும் ஓய்வில் இருந்தார்கள்.

இந்தநிலையில் ஒவ்வொரு முறையும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் 1-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்துக்குள்ளேயே குறைந்த அளவு பஸ் போக்குவரத்து தொடங்கியது. எனினும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல முடியாமல் பயணிகள் தவித்தார்கள். அதை கருத்தில் கொண்டு 7-ந் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவு நீண்ட தூர பஸ்கள் பயணிகளுடன் வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டன. முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பே அனைத்து பஸ்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

கோபி பணி மனையில் இருந்து நேற்று காலை 27 பஸ்கள் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.

பயணம் செய்த அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளி விட்டு பயணம் செய்தனர். குறிப்பாக கோவை செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கொடுமுடி பணிமனையில் இருந்து நேற்று கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. 50 சதவீத பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது என்றும் மேலும் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கொடுமுடி பணிமனையின் மேலாளர் ரமேஷ் கூறினார்.

சத்தி பணிமனையில் இருந்து நேற்று 22 பஸ்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இதேபோல் 5 டவுன் பஸ்கள் பண்ணாரி, அத்தாணி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. காலை 9 மணி வரை பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மதியத்துக்கு மேல் அனைத்து பஸ்களிலும் கூட்டமாக காணப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள்.

மேலும் குறிப்பிட்ட சில சிறப்பு ரெயில்களை பொது போக்குவரத்துக்காக இயக்க அரசு அனுமதித்து இருக்கிறது. அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று ஈரோடு ரெயில்நிலையம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டது.

இதை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக பயண சீட்டுகள் முன்பதிவு தொடங்கியது. எனவே நேற்று, உறுதி செய்யப்பட்ட பயணசீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ரெயில் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அதிக அளவில் வந்ததால், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.


Share this News:

Leave a Reply