அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் பயங்கரம்!

Share this News:

ஈரோடு (03 பிப் 2020): ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அண்மையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பிரமுகர், சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையத்தில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில், தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக கொடுத்துவிட்டு இன்று காலையில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் அங்கு வந்த கூலிப்படையினர் 4 பேர், திடீரென கீழே இறங்கி, அரிவாளுடன் அவரை துரத்தி நடுரோட்டில் வைத்து வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட ராதாகிருஷ்ணன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் வைக்கப்பட்ட மருத்துவமனை முன்பாக உறவினர்கள், கட்சியினர் என ஏராளமானோர் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே தேடுதல் வேட்டையை முடுக்கி தீவிரப்படுத்திய போலீசார், தர்மாபுரி அருகேயுள்ள சோதனை சாவடியில் வைத்து கொலையாளிகள் சென்ற ஸ்கார்பியோ காரை மடக்கினர். காரில் இருந்த சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சரவணன், பாலமுருகன்,ராஜேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில், சங்கராம்பாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக 2013ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் தற்போது உயிரிழந்த ராதாகிருஷ்ணன் கைதாகி வெளியேவந்துள்ளார்.

தனது தந்தை சேகரின் கொலைக்கு பழிதீர்க்க சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகனான அரவிந்த் என்பவர், கூலிப்படையை ஏவி, ராதாகிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கூலிப்படையை ஏவிய அரவிந்த், மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபர் ஆகியோரை போலீசார், தேடிவருகின்றனர்


Share this News:

Leave a Reply