அதிமுகவினரின் கொடூரச் செயல் – 15 வயது சிறுமி எரித்துப் படுகொலை!

Share this News:

விழுப்புரம் (11 மே 2020): விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமி ஒருவர், அ.தி.மு.க.வினர் இருவரால் எரித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் தரப்பினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜெயபால் வீட்டிற்கு நேற்று கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயபாலின் 15 வயது மகள் ஜெயஸ்ரீயை கட்டிப் போட்டு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் ஜெயஸ்ரீயை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னதாக, கலியபெருமாள், முருகன் ஆகிய இரு அதிமுகவினரும் சேர்ந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக போலீசாரிடம் ஜெயஸ்ரீ வாக்குமூலம் கொடுத்தார்.

திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். கொடூரமான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News: