பூமி – வாட்ஸ் அப் காமடி!

பூமி சினிமா விமர்சனம்
Share this News:

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கதைகளும் காமடிகளும் வெள்ளித்திரையில் உங்களை மகிழ்விக்க வந்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒன்றைப் பார்க்க விரும்பினால் சமீபத்தில் வெளியான பூமி திரைப்படத்தைப் பாருங்கள்.

13 குடும்பம், கார்ப்பரேட், ஃப்ரீ மேசன், இலுமினாட்டிகள், நான் தமிழன்டா, இயற்கை விதை, மரபணுமாற்ற விதைகள், நாசா, செவ்வாய் கிரகம், விஞ்ஞானி, நாலு ஃபைட், நாலு பாட்டு, ஏலியன்களை மிஞ்சிய நாயகன், இறுதியாக ஒரு வந்தே மாதரம். இவற்றைக் குழைத்து நாலு வரியில் நாயகன் 13 குடும்பத்தை வீழ்த்துவதாக ஒரு வாட்ஸ் அப் பூச்சுற்றல் தட்டி விட்டால் அதுதான் பூமி.

பாரிசாலனோ, சீமானோ, ஹீலர் பாஸ்கரோ பார்த்தால்கூட தூக்கு போட்டு கொள்வார்கள். ஏன்டா, சுற்றுவதற்கு ஒரு எல்லையே இல்லையா? என்ன கருமாந்திரத்தை எடுத்தாலும் பார்ப்பதற்கு இழிச்சவாய் தமிழன் இருக்கிறான் என்ற தெனாவெட்டா?

இயற்கை விவசாயம் செய்து மாசத்துக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறாராம் நாயகன். கணக்கெல்லாம் வேறு போட்டு காட்டுகிறார்கள். இயற்கை விவசாயி திருமூர்த்தியிடம் போய் ஒரு அரை மணிநேரம் உட்கார்ந்து பாருங்கள். இயற்கை விவசாயம்னா என்னவென அவர் வகுப்பெடுப்பார்.

இதில், கார்ப்பரேட் லட்சக்கணக்கில் ஊதியம் கொடுத்து வைத்த தொழிலாளர்களையெல்லாம் அதே ஊதியத்துக்கு அமர்த்தி, இந்திய கார்ப்பரேட்டா வேறு ஆகிறாராம். அப்படி ஆவதற்கு, அதே கார்ப்பரேட்டுகளின் தயாரிப்புகளே பயன்படுத்தப்படுகின்றன என்பது உலக மகா காமடி. பென்ஸ் காரில் வந்து, இந்தியப் பொருளைப் பயன்படுத்துவோம் என நம்ம மோடி அய்யா அடிக்கும் ஸ்வச் பாரத் காமடிக்குச் சமமானது.

இதுல ப்ரான்ட் தமிழனாம். லாஜிக்னா என்னவென்றெல்லாம் பார்க்கும் அளவுக்குத் தமிழன் இன்னும் முன்னேறவில்லை என நினைத்து அடித்துவிடுவதற்கு ஒரு எல்லை இல்லையா? நடுக்கடலில் உணவில்லாமல் தவித்தபோது தவளை கறி சாப்பிட்டேன், ஒரு கப்பலில் 1000 யானைகளை ஏற்றி சென்று இலங்கை ராணுவத்தை மூக்கில் விரல் விட்டு ஆட்டினோம் என்ற ரீதியிலான காமடிகளை வெள்ளித்திரைக்கும் கொண்டு வந்து அத்துறை மீதிருக்கும் கொஞ்ச, நஞ்ச எதிர்பார்ப்பையும் குழிதோண்டி புதைக்க வைத்து விட்டீர்களேய்யா.

எல்லாம் சரி, அதென்ன கடைசியில் ஒரு வந்தே மாதரம்? அதற்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு? ஓ ஓ, நாங்களும் தேசப்பற்றாளர்கள்தாம்னு காட்டுகிறீர்களாக்கும்! எவ்வகை தேசப் பற்றாளர்கள்னு அந்த ஒரு சொல்லிலேயே தெரிந்துவிட்டதே!

நாங்களும் தேசப்பற்றாளர்கள்தாம்லே. அதற்கு நாங்கள் பயன்படுத்துவோம், ஜெய் ஹிந்த்!

தமிழன்


Share this News:

Leave a Reply