எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 05 – வீடியோ!

Ertgrul- Haleema
Share this News:240p Mobile Version For Download Click Here

அலெப்போ செல்லும் வழியில் சந்தித்து, உடனிருந்து உணவருந்திய நபர்கள் தாம் கொலை செய்யத் தேடும் நபர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகி அவர்களிடமிருந்து வேகமாக விடைபெற்று கிளம்புகிறார் டைட்டஸ். அலெப்போவுக்கு எர்துருல் வந்து சேரும்போது, அங்கே வைத்து எர்துருலைக் கொல்வது அவரது திட்டம்.

காயி கூடாரத்தினுள் நுழைந்த கரடோய்கரின் ஆட்கள் குறித்து சுலைமான் ஷா தம் கூடாரத்தில் ஆலோசனை நடத்துகிறார். அதில், குண்டோக்டுவுக்கு ஒரு பேயாக இருப்பதற்கான தகுதி குறித்த சோதனையொன்றும் வைக்கிறார். அதில் தேறாத குண்டோக்டுவை, கோத்திரப் பொருட்களைச் சந்தைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் பொறுப்பை வழங்குகிறார், சுலைமான் ஷா !

காயி கோத்திர நெசவாளர்கள் தயாரிக்கும் விரிப்புகள் சரியான வண்ணத்தில் இல்லை என்பதை நினைத்து வருந்தும் அன்னை ஹேமுக்காக, தம் தந்தையிடமிருந்து வண்ணக்கலவை சேர்ப்பது குறித்து விவரம் அறிந்து அவர்களுக்கு உதவுவதற்கு முனைகிறார் ஹலீமா. அதற்காக, சாயம் சேர்க்கும் முன்னர் துணியை மாட்டுச் சாணியில் தோய்த்தெடுக்க ஹலீமா அறிவுரை கூறுகிறார். இது அங்குள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

எர்துருலுக்கு கோக்சேவைத் திருமணம் செய்விப்பது தொடர்பாக சுலைமான் ஷாவும் அன்னை ஹேமும் பேசிகொள்கிறார்கள். கோத்திர நெசவுப்பட்டறையில் ஹலீமா நுழைந்ததை செல்சான் விரும்பவில்லை. அவள், கோக்சேவிடம் ஹலீமா விஷயத்தில் உசாராக இருக்க அறிவுரை கூறுகிறாள்.

அலெப்போ சென்ற எர்துருல், அன்று அமீர் மக்களின் குறை கேட்கும் தினம் என்பதை அறிந்து உடனடியாக அரண்மனை செல்கிறார். அங்கு, எர்துருலிடம் என்ன வேண்டுமென கேட்கிறார் அமைச்சர் சகாபுத்தீன். முகமே கொடுக்காமல் பேசுபவரிடம், ஆண் மக்கள் முகத்துக்கு நேராகத்தான் பேசுவர் என்றுகூறி அவரைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார். அதன்பின், தாம் வந்தக் காரணத்தைக் கூறியதும் “எதற்காக உங்களுக்கு நாங்கள் நிலம் கொடுக்கவேண்டும். நாடோடிகளால் அசுத்தமாவதற்கா?” எனக் கேட்டு அவமானப்படுத்துகிறார் அமைச்சர் சகாபுத்தீன்! தங்களுக்கு நிலம் தந்தால், காயி கோத்திரத்தினரின் 2000 வீரர்கள் அலெப்போ அமீருடன் சேர்ந்து சிலுவைப்படையினருக்கு எதிராக போர் செய்வர் என்கிறார். அதற்கு, அலெப்போ அரண்மனையில் காவலுக்கு நிற்கும் காவலாளிகள் எண்ணிக்கையே அதனைவிட கூடுதலாக உள்ளனர் எனக் கூறி அவரின் கோரிக்கையை நிராகரிக்கிறார். உடனே, எதிர்பாராத விதமாக எர்துருல் அங்கிருந்த வீரர்கள் சிலரைத் தாக்கி, காயி கோத்திரத்தினரின் ஒரு வீரர் உங்களின் பல வீரருக்குச் சமம் என கூறுகிறார். இதனைப் பார்த்து ஆச்சர்யமுற்று மகிழ்ந்த அமீர் எல் அஜீஸ், அன்றிரவு உணவில் தம்முடன் சேர்ந்துகொள்ள எர்துருலுக்கு அழைப்பு கொடுக்கிறார். அங்கே நிலம் வழங்குவது தொடர்பாக பேசலாம் என்கிறார்.

கரடோய்கரை மீண்டும் சந்திக்கும் குர்தோக்லு, இம்முறை சுலைமான் ஷாவையும் இளவரசர் நுஃமானையும் கரடோய்கரின் கையில் சிக்க வைப்பதற்கான ஆலோசனையைக் கூறுகிறார். அதன்படி, கரடோய்கர் காயி கோத்திரத்தின் கேரவனைத் தாக்கி குண்டோக்டுவைச் சிறைபிடிக்க வேண்டும். குண்டோக்டுவை விடுவிக்க சுலைமான் ஷாவிடம் இளவரசர்களைக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டுமென நிபந்தனை விதிக்க வேண்டும். தம் மகனைக் காப்பாற்ற சுலைமான் ஷா நிச்சயமாக அதனைச் செய்வார். கரடோய்கர் சுலைமான் ஷாவைக் கொன்றுவிட வேண்டும். அதன் மூலம் குர்தோக்லு காயி கோத்திரத்தின் பேயாக ஆகிவிடலாம் என திட்டம் வகுக்கின்றனர்.

அலெப்போ அரண்மனையில் தங்கியிருக்கும் எர்துருலும் நண்பர்களும் இரவு விருந்துக்காக தயாராகின்றனர். குளிக்கச் சென்ற அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது, அவர்களின் ஆயுதங்கள் களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சியாகின்றனர்.

அலெப்போ அரண்மனையில் வைத்து இரவோடு இரவாக எர்துருலைக் கொலை செய்ய, அலெப்போ தளபதி நாசிருடன் சேர்ந்து திட்டமிடுகிறார், டைட்டஸ்!

இரவு உணவுக்காக ஒன்றுகூடிய இடத்தில், எர்துருலுக்கு பரிசு வழங்குவதாகக் கூறி ஒரு பெட்டியைக் கொடுக்கிறார் எல் அஜீஸ். அதில், எர்துருலின் நண்பர்களின் ஆயுதங்கள். தம் ஆயுதங்களையே பாதுகாக்க முடியாதவர்களைக் கொண்டா போருக்குச் செல்வது; அவர்களின் வாக்குறுதியை எப்படி நம்ப முடியுமென கேட்டு எர்துருலை அவமானப்படுத்துகிறார் எல் அஜீஸ். நிலம் வழங்குவது தொடர்பாக நாளை முடிவு தெரிவிப்பதாக கூறுகிறார். அதே வேளை, எர்துருல் தங்கும் அறையில் மயக்கம் விளைவிக்கும் மணத்துடனான மெழுகுவர்த்தி வைக்கப்படுகிறது. இது தெரியாமல் அறைக்கு வந்த எர்துருல் மயக்கமாகிறார். உறக்கத்திலிருக்கும் எர்துருலைக் கொல்ல டெம்ப்ளர்கள் வருகின்றனர்.

இத்துடன் இப்பகுதி நிறைவடைகிறது.

எர்துருல் சீசன் 1 தொடர் 4எர்துருல் சீசன் 1 தொடர் 6


Share this News:

Leave a Reply