எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் முகத்தில் லேசான மகிழ்ச்சி!

Share this News:

சென்னை (21 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட தருணத்தில், தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு வீடியோ காட்சி மூலம் தெரிவித்தார்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பிறகு பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவியும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமையன்று மாலை 6 மணியளவில் அவரது உடல்நலம் குறித்து திரைத்துறையினர், அவரது ரசிகர்கள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பலரும் அவரது பாடல்களைப் பாடி, அவரது உடல் நலத்திற்காக வேண்டினர்.

இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் தந்தையின் உடல் நிலை வியாழக்கிழமையை விட வெள்ளிக்கிழமை சற்று முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், எனினும் வெண்டிலேட்டர் உதவியுடனேயே இன்றும் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும் சரண் தெரிவித்தார்.

மேலும் எஸ்பிபிக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றியையும் சரண் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply