ஓட்டு இயந்திரங்கள் – அறிவு சோம்பேறிகள்

Share this News:

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசிக்கிலிருந்து வெளியாகும் கரன்சிகளுக்கு இணையானவை. நம்ம நாட்டில் கரன்சி போன இடமும் தெரியாது.. வாக்கு இயந்திரம் போகும் இடமும் தெரியாது.
முதல் நிலை சோதனைகள் முடிந்த பிறகு எடுத்தேற்ற ஆய்வு (randomisation) நடத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி வசம் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் மி.வா.இபாதுகாப்புக்கு தேர்தல் அதிகாரி பொறுப்பேற்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் பிரத்தியேக எண்ணிடப்பட்ட மி.வா.இ களை முந்தின நாள் பாதுகாப்பு அறையில் அடைப்பதில் தொடங்கி, மாதிரி வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள், பழுதான இயந்திரங்களுக்கு பதிலி இயந்திரங்கள் என்று ஒவ்வொன்றுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்களுக்குட்பட்ட வழிகாட்டு நெறிகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது தேர்தல் அதிகாரியின் பொறுப்பாகும்..
தேர்தல் நாளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மி.வா.இ பாதுகாப்பு மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் இரட்டை பூட்டு அமைப்பில் வைக்கப்படும். மி.வா.இகள், தேர்தல் சம்பந்தமான ஆவணங்கள், இதர தேர்தல் ஆணைய பொருட்களை எவ்வித காலதாமதமும் செய்யாமல் மையத்தில் ஒப்படைப்பதை தேர்தல் அதிகாரி, உதவி அலுவலர்கள், உதவியாளர்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறும் எந்த அரசு ஊழியரும் கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார். தங்களது வசம் ஒப்படைக்கப்பட்ட மி.வா.இகள் பாதுகாப்பு மையத்தில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து, அதன் எண்ணையும் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் இருந்து வந்த மி.வா.இகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி படுத்த வேண்டும். இதற்கான தேர்தல் அதிகாரியின் உறுதிமொழியும் சீலிடப்பட்ட உறையில் இட்டு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
எல்லா மி.வா.இகளும் பாதுகாப்பு மையத்திற்கு வந்ததில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் நாள் அதிகாலை வரை யாரும் பூட்டிய அறைக்குள் நுழைவது தடைசெய்யப்படும். அப்படி மீறி ஏதேனும் அவசர அலுவல் காரணமாக உள்ளே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், உடனடியாக வேட்பாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு பணியை விரைவாக முடித்து மீண்டும் சீலிடப்பட வேண்டும். இதற்கான பதிவேட்டில் உள்ளே சென்றவர், மேற்கொள்ளப்பட்ட பணி உள்ளிட்ட உரிய விபரங்கள் தெளிவாகப் பதியப்பட வேண்டும்.
இந்த மையத்தின் இரட்டைப் பூட்டு சாவிகளில் ஒன்று மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடமும் மற்றொன்று தொகுதியில் தேர்தல் நடத்திய அதிகாரி Returning Officer யிடமும் இருக்கும். வளாகத்திற்கு 24 மணிநேரமும் மூன்றடுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு அறையின் நுழைவுவாயிலை கண்காணிக்கும் வகையில் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சி முகவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். சிசிடிவி பதிவுகளை அவர்கள் அனைவரும் நாள் முழுதும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பாதுகாப்பு அறையையொட்டிய உள் வளாகத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்பட கூடாது. மேலும் வளாகத்திற்குள் தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்பட வேண்டும். கூடுதலாக ஜெனரேட்டர், யூபிஎஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும். வளாகத்திற்கு குறிப்பிட்ட தொலைவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட எவரது வாகனமும் உள் வட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து எவராகினும் நடந்தே செல்ல வேண்டும்.
இந்த அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கண்டிப்புடன் கடைபிடிக்கப் படுவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விதிமுறைகள் ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் வரையிலும், அதைத் தொடர்ந்து புகார்கள் அளிக்க வழங்கப்படும் 45 நாள் அவகாசம் வரையும் தொடரும். ஒருவேளை வழக்கு ஏதும் தொடரப்பட்டால் அதன் தீர்ப்பு வழங்கப்படும் வரையும் இந்த மி.வா.இ களை பாதுகாக்க அரசு பொறுப்பேற்கிறது.
இப்படியான உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரம் தான் காரில் கிடைக்கிறது.. ஆட்டோவில் கிடைக்கிறது.. தனியார் கொடவுனில் கிடைக்கிறது.. ரோட்டில் கிடைக்கிறது.. ஓட்டில் கிடைக்கிறது.. வாக்கு பதிவுக்குப் பிறகு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாரிகள் கள்ளத்தனமாக போய்வருவார்கள்.. இதெல்லாம் சின்ன சம்பவங்கள் – பெரிதுபடுத்த தேவையில்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரே சொல்லுவார்..
இந்த பின்புலத்தில் மே 2019ல் 19 லட்சம் ஓட்டு இயந்திரங்கள் எங்கோ மாயமாய் மறைந்துவிட்டன என்ற தகவலை frontline வெளியிடுகிறது.. அந்த செய்தி பொய்யென்று தேர்தல் ஆணையம் மறுக்கிறது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சுவாரஸ்யமானது. மாநில தேர்தல் ஆணையங்களும் ஓட்டு இயந்திரங்களை வாங்குகின்றன. அவற்றில் தாங்கள் தலையிடுவதில்லை என்பது தான் அவர்கள் சொன்ன நியாயமான காரணம். அதுவே காரணமாக இருந்தாலும் 19 லட்சம் இயந்திரங்களை இந்த இந்த மாநில தேர்தல் ஆணையங்கள் வாங்கி இப்படி இப்படி பயன்படுத்தின என்று சொல்வது தானே நேர்மை.. அதில் என்ன மூடுமந்திரம் இருக்க முடியும்? மனோரஞ்சன் ராய் என்கிற ஆர்டிஐ செயற்பாட்டாளர் தயாரிக்கப்படும் ஓட்டு இயந்திரங்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கு வரும் ஓட்டு இயந்திரங்களுக்கும் உள்ள மலையளவு வேறுபாட்டையும், பழுதாகும் இயந்திரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையையும் தெளிவுபடுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடர்கிறார். இந்த வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுகிறது. இந்த ஆதங்கத்தையும் அந்த வழக்கு விசாரணையில் பதிவு செய்கிறார் ராய். (படம் 1)
குடிமக்களின் அடிப்படை உரிமையை நிர்ணயிக்கிற உச்சபட்ச பாதுகாப்புக்கு உட்பட்ட மின்னணு இயந்திரங்கள் எப்படி கடைச் சரக்காக மாறிப் போயிருக்கிறது என்ற கேள்வியையே ஒருத்தரும் எழுப்ப மாட்டார்கள்.. நள்ளிரவில் கணினி தொழில்நுட்ப ஆட்கள், அதிகாரிகளும் கன்டெயினர் வாகனங்களும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகத்துக்கு உலா வருகிறார்கள்.. இதெல்லாம் தாண்டி நேர்மையாக தேர்தல் நடக்கிறது என்று நாம் நம்ப வேண்டும். நம்பித் தொலைப்போம்.. காசா பணமா? (படம் 2}
அப்படி கண்ட இடத்தில் கிடக்கும் ஒரு இயந்திரம் துல்லியமான விஞ்ஞான சாதனம்.. அதை குறை சொல்லலாமா என்றும் வக்காலத்து வாங்குவோம்.. ஆனால் அதே தொழில்நுட்ப வல்லுனர்கள் தான் இந்த இயந்திரங்களில் ஒருமுறை தான் ப்ரோக்ராம் எழுதலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை நம்புவதற்கில்லை என்கிறார்கள். (இந்தியா ஃபோரம் – ஏப்ரல் 2019) (படம் 3).
மேலும் தேர்தல் ஆணையம் சொல்லும் இந்த உறுதிமொழியை இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கொடுக்காமல் மழுப்புவது ஆர்டிஐ தகவலில் வெளிபட்டுள்ளது. இயந்திரத்தில் உள்ள ஃப்ளாஷ் மெமரியை அழித்துவிட்டு எழுத முடியும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். (படம் 4)
இதெல்லாவற்றையும் தாண்டி மி.வா.இ கள் 100% துல்லியமானவை என்று நம்ப நாம் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அதை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க வேண்டிய கடமை அரசுக்கும. தேர்தல் ஆணையத்துக்கும் தானே இருக்கிறது. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்.. வாக்கு இயந்திரத்தோடு சிலர் பிடிபட்ட உடன், தேர்தல் ஆணையர் குறுக்கே வந்து விழுந்து ‘அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை’ என்று அலறுகிறார். கையும் களவுமாக பிடிபட்டார்கள் என்றவுடன் ‘அதெல்லாம் டம்மி பீஸு’ என்கிறார்கள்.. டம்மி இயந்திரங்கள் மட்டும் வெளியே போகலாமா? அதுவும் வெளுத்து 15 வாக்குகள் பதிவான இயந்திரம் என்று நிரூபணம் ஆனவுடன் பம்மிவிட்டார்கள்..
அதேமாதிரி வளாகத்திற்குள் வாகனங்கள் எதற்காக வருகின்றன என்றால் அவை நடமாடும் கழிவறைகள் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.. (படம்6) சரி அப்படியானால் புகார் எழும் இடங்களிலாவது அந்த vvpat ஐ எண்ணி காட்டுங்களேன் என்றால் அதெல்லாம் முடியாது.. அதில கோளாறு ஆகிவிட்டது என்று சல்ஜாப்பு சொல்லப்படும்.. என்னய்யா இது? நீங்கதான் இதில் எதுவுமே தப்பு நடக்காதுன்னு துண்டைப் போட்டு தாண்டுறீங்க.. அடுத்த செகன்டு குண்டு போட்டு காலிப் பண்றீங்க.. இதில் ஏதாவது தர்க்கரீதியாக ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதா?
இப்பவும் சொல்கிறோம். இயந்திரத்தில் பழுது இருக்க முடியாது.. ஆசான் சுஜாதா சொல்வதைப் போல் இயந்திரத்துக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற ஒரு எழவும் தெரியாது.. ஆனால் அதனை கையாளும் மனிதனுக்கு எல்லாம் தெரியும்.. அவனால் என்ன எழவு வேணுமானாலும் கொட்ட முடியும்.. மேலும் ஆசானுக்கு, “இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் வேறு ஒருவருக்கு ஓட்டு விழுகிறது” என்று நீதிமன்றத்தில் புகார் செய்தவர்கள் எடுத்து வைத்த வாதங்களைக் கண்டு சிரிப்பு வந்ததாம்.. இப்ப ஆசான் இல்லை.. இருந்திருந்தால் மகாராஷ்டிராவில் 2017 ஆம் ஆண்டு நடந்த ஒரு தேர்தலில் மெஷினில் மோசடி நடந்திருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ஒத்துக்கொண்ட உண்மையைக் கண்டு எதனால் சிரித்திருப்பார் என்று யோசிக்கிறேன். (படம்5)
சரி.. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அறிவியல் என்பது என்ன என்ற கேள்விக்கு வருவோம். எல்லாவற்றையும் சந்தேகப்படுவது, கேள்வி கேட்பது என்பதுதானே.. அப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு வேதகால விஞ்ஞான ரீதியில் பதில் வருகிறது என்றால் எங்கோ சதி நடக்கிறது என்றுதானே அர்த்தம்.. புகார் எழும் இடங்களில் அந்த சந்தேகங்களைத் தீர்த்து பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்தக் கூடிய பதில்களைப் பெற முடியாமல் தளர்ந்து நிற்பவர்களை அறிவுச் சோம்பேறிகளாக கருதி ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா? முன்னர் சுட்டப்பட்ட வழிகாட்டு நெறிகளுக்கான பொறுப்பேற்பு (accountability) இங்கே எந்த லட்சணத்தில் இருக்கிறது?
இங்கே சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுகிறதா என்பதில் தான் சந்தேகம் எழுந்துள்ளது. அதை நிவர்த்தி செய்யும் பொறுப்பு ஆளும் அதிகார மையங்களுக்கே உண்டு. அதை கேள்வி கேட்காமல் சதிக் கோட்பாடு என்று மடைமாற்றுவீர்கள் எனில், அறிவு சோம்பேறிகள் தான் எத்தனை உன்னதமானவர்கள்… ஏற்கனவே ரோட்டில் போராடுபவர்களுக்கு வேலை வெட்டி இல்லாதவர்கள் என்ற அடைமொழி உண்டு.. அதனோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம். இதெல்லாம் ஜனங்களாக பார்த்துக் கொடுக்குறது?

Share this News:

Leave a Reply