அமெரிக்க சுதந்திர வரலாறு – ஒரு பார்வை

Share this News:

ஜூலை 4 உலகின் மாபெரும் வல்லரசு என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் 245வது சுதந்திர தினம் இன்று! அமெரிக்க சுதந்திர போராட்டத்தைப் பற்றி அறிந்துகொள்வோமா..?

சிறு குழந்தைகளிடம் கேட்டாலும் பதில் வரக்கூடிய ஒரு கேள்வி, அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?

கொலம்பஸ்!

கி.பி. 1492-இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆனால் அமெரிக்கா எனும் ஒரு நாடு கொலம்பஸ் மூலமாக உலகத்துக்கு அறிமுகமாகவில்லை.

கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வந்து சென்றதற்குப் பிறகு, அந்த இடம் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றதொரு இடமா எனும் ஆய்வுக்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ‘அமெரிக்கோ வெஸ்புசியோ” என்பவர் அந்த இடத்துக்குப் பயணம் மேற்காண்டார்.

தனது அமெரிக்க பயண அனுபவத்தை தொகுத்து அவர் எழுதிய ‘புதிய உலகம்” NEW WORLD எனும் புத்தகத்தில்தான் முதன்முதலாக அமெரிக்கா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான் கி.பி 1523-இலிருந்து அமெரிக்கா என்று அந்த நிலப்பரப்பை மக்கள் அழைக்கத் துவங்கினர்.

இந்த நூலின் மூலமாக அமெரிக்கா குறித்த தெரிய வந்த செய்திகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகள் பலவும் தங்கள் காலனியாதிக்கத்தை அங்கு நிறுவ போட்டி போட ஆரம்பித்தன.

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்ச்சுகீசியர்களும்,ஸ்பானியர்களுமே அமெரிக்காவில் தம்தமது காலனியாதிக்கத்தை முதன் முதலாக நிறுவின. பிறகு பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து, ஹாலந்து, பிரான்ஸ் போன்ற தேசங்களும் அங்கே கால்பதிக்க ஆரம்பித்தன. அதனால் இவர்களுக்குள் அடிக்கடி உரசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.

வுழக்கம்போல, மற்ற அனைத்து நாட்டவரையும் பின்னுக்குத் தள்ளி, பிரிட்டன் தனது மக்களை, வர்ஜீனிய மாகாணத்தில் குடியமர்த்தி, தனது அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட ஆளுநர் ஒருவரையும் அங்கு நியமித்தது. இவ்வாறு இது பின்னர் சிறிது சிறிதாக 13 மாகாணங்களுக்கும் பரவியது.

இவ்வாறு குடியேறியவர்கள் காலப்போக்கில் தங்களை அந்த நாட்டின் பூர்வ குடிகளாகவே, அதாவது அமெரிக்கர்களாகவே கருதத் தொடங்கினர். அவர்களின் இத்தகைய நடத்தை, காலப்போக்கில், பிரிட்டிஷ் அசாங்கத்துக்கு எதிராகவே மாறியது. எங்கோ அமர்ந்து கொண்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தமது தாய்நாடான, பிரிட்டிஷ் அரசுக்கும், அதன் கைப்பாவையாக இருக்கும் ஆளுநர்களுக்கும் எதிராக, பிரிட்டிஷ் காலனி-இன் பதிமூன்று மாகாணங்களும் ஒன்று சேர்ந்தன. அப்போதுதான் அமெரிக்க ஐக்கிய நாடாக அவை உருப்பெற்றன.

அமெரிக்கா பிரிட்டனை எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் இறங்கியது. 1775, ஏப்ரல் 19-ஆம் நாள் போர் தொடங்கியது. மிகவும் உக்கிரமாக போர் ஆரம்பித்தது. அப்போதுதான் அமெரிக்க காங்கிரஸ், ஜார்ஜ் வாஷிங்க்டன் என்பவரை போர்ப்படைத் தளபதியாக நியமித்தது. அத்துடன் அமெரிக்க காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ், ஸ்பெயின், இந்தியா ஆகியன ஆதரவளிக்க முன்வந்தன. அவ்வேளை,இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த திப்பு சுல்தான் அமெரிக்க சுதந்திர போருக்கு நிதியளித்தார் என்பது வரலாறு.

ஆரம்பத்தில் சிறு சிறு தோல்விகள் ஏற்பட்டாலும் ஜார்ஜ் வாஷிங்டன் இறுதியில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்தார். 1776- ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் தாமஸ் ஜெஃபர்சன் என்பவரின் பெரும் பங்களிப்புடன் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்டு,அமெரிக்கா சுதந்திரம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது.

எனினும், அதன் பின்னரும் பிரிட்டனுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் சுதந்திரத்துக்கான அமெரிக்க யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. இறுதியாக 1783-ஆம் ஆண்டு வெர்செயில்ஸ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க சுதந்திர போர் முடிவுக்கு வந்தது.

சுதந்திரம் பெற்ற 1783-இலிருந்து 1789 வரை வெறும் ஆறுவருடங்களில், ஜான் ஹான்ஸன் தொடங்கி ஃகிரீஃபின் என்பவர் வரை ஏழு பேர் வரை அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பு வகித்தார்கள். அதன்பிறகுதான் 1789-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கென அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ஜனாதிபதியாக பதவியேற்றவர் ஜார்ஜ் வாஷிங்டன். சுதந்திர போராட்டத்தின் ராணுவ தளபதியாக இருந்த அதே வாஷிங்டன் தான், சுதந்திர அமெரிக்காவின் எட்டாவது ஜனாதிபதி. அமெரிக்க குடியரசின் முதல் ஜனாதிபதி.

அதன் பிறகு அமெரிக்காவில் அமெரிக்க கருப்பினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் கொடூரமாக நடைபெற ஆரம்பித்தன. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர்கள் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அமெரிக்க குடியரசின், 65 வருடங்களுக்குப் பிறகு ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியானவுடன், அடிமைத்தனத்தை துடைத் தெறிவதாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா இரண்டு துண்டானது.

1861ம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென் மாநிலம் என்று மற்றொரு அமெரிக்கா உருவாகி இரண்டாக பிரிந்து நின்றது அமெரிக்கா. தென் மாநிலங்களில் ஜெஃபர்சன் டேவிஸ் தலைமையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்மைப்பு உருவாக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஜெஃபர்சன் டேவிஸ் தலைமையிலான அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் கடுமையான உள்நாட்டு யுத்தம் நடைபற்றது.

மிகக் கோரமாக பெரும் பொருளாதார இழப்புக்களுடன் நடைபெற்ற இப்போரில், இறுதியில் ஒரு வழியாக 1865 ஏப்ரல் 9 அன்று ஆபிரகாம் லிங்கனின் ஐக்கிய அமெரிக்கா வெற்றி பெற்று போர் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஒரே அமெரிக் ஐக்கிய குடியரசு உருவானது.

போர் முடிவுற்ற ஐந்தாம் நாள், 1865, ஏப்ரல் 4, அன்று ஆபிரகாம் லிங்கன் வெள்ளை இனத்தை சேர்ந்த ஜான் வில்க்ஸபூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கருப்பினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அமெரிக்காவில் இன்று வரை குறைந்த பாடில்லை. இதற்காக அமெரிக்கா ஏராளமான உயிர்ப்பலி கொடுத்திருக்கிறது. அதிபர் ஆபிரகாம் லிங்கன் தொடங்கி, கருப்பினத் தலைவர் மால்கம் எக்ஸ் வழி வந்து, 2020ல் நடைபெற்ற ஜார்ஜ் பிளாய்த் படுகொலைகள் வரை கருப்பினத்தவர்களுக்கு எதிரான கோரத் தாண்டவம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

அமெரிக்காவின் வரலாற்றில் பல இருண்ட பக்கங்கள் உள்ளன. அமெரிக்காவிற்கும் கம்யூனிசத்திற்கும் எதிராக நடைபெற்ற பனிப்போர். தன்னுடைய வர்த்தகத்தை அரபு நாடுகளில் நிறுவுவதற்காக, பொய்யாக ஜோடிக்கப்பட்ட ‘இஸ்லாமிய பயங்கரவாதம்” போன்ற சொல்லாடல்கள் என அமெரிக்காவின் பல கோர நடவடிக்கைகள் பயங்கரமானதாக மாறியது.

பொருளாதார-வர்த்தக ஆதிக்கத்துக்காக பல்வேறு அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, ஆப்கானிஸ்தான்,ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட போர்கள், ஒவ்வொரு முறையும் ஐ.நா.-வில் இஸ்ரேலிய அநியாயத்துக்கு ஆதரவாக இருப்பது, இன்னபிற தேசங்களில் தனது ஆதிக்கம் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அமரிக்கா மீது இன்று வரை தொடர்கின்றது.

இன்றைய அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வரலாற்றை மட்டுமல்ல, அமெரிக்காவினால் சுதந்திரத்தை இழந்த நாடுகளின் வரலாற்றையும், அதனால் அநாதரவாகி நின்ற மக்களின் வரலாற்றையும் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கு மிகவும் உறுதுணையாக பல நூல்கள் உள்ளன. தமிழில் பா.ராகவன் என்பவரால் எழுதப்பட்ட “டாலர் தேசம்” எனும் நூலும் அதில் ஒன்று.

அன்று ஏதோ ஒரு கண் காணா தேசத்தில் குடியமர்த்தப்பட்டு, ஐக்கியமானவர்கள் இன்று, உலகின் பிற நாட்டு பூர்வக் குடிமக்களை தங்கள் சொந்த நிலத்தை விட்டே துரத்தும் கொடுஞ்செயலையும், அத்தகைய செயல்களுக்கு துணை போய்க் கொண்டிருப்பதையும் என்னென்று சொல்வது..?


Share this News: