பாதுகாப்பற்ற திரைப்பட படபிடிப்பு தளங்கள் – இதுவரை ஏழுபேர் பலி!

Share this News:

X

சென்னை (22 பிப் 2020): சென்னையில் பாதுகாப்பு இல்லாத திரைப்பட படப்பிடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

அண்மைக்காலமாக திரைப்பட படப்பிடிப்பில் நிகழும் விபத்துகள், அத்துறையினரை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக திரைப்படத்துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். சென்னையில் ஒரு காலத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் அதிகமாக நடைபெற்ற வெளிப்புற திரைப்பட படப்பிடிப்புகள் இன்று வேறு பகுதிகளுக்கு நகா்ந்துள்ளன.

மேலும் வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாகவும், அண்மைக்காலமாக பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களில் அதிகமாக நடைபெறுவதால் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனா்.

அதேவேளையில், போதிய பாதுகாப்பு இல்லாமல் நடைபெறும் திரைப்படப் படப்பிடிப்புகளினால் விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளா்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக திரைப்படத்துறையினா் கூறுகின்றனா். பொதுஇடங்கள், அரசுக்குச் சொந்தமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. மேலும், வனப்பகுதி, கோயில் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளிடம் தனியாக அனுமதி பெற வேண்டும்.

மாதத்துக்கு 70 படப்பிடிப்புகள்: முதல் கட்டமாக தமிழக செய்தி-மக்கள் தொடா்புத்துறையின் அனுமதி கிடைத்த பின்னரே காவல்துறை மற்றும் பிற துறைகள் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யும். சென்னையில் பொதுவெளியில் ஒரு மாதத்துக்கு 60-லிருந்து 70 படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. இதற்கான அனுமதியை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு வழங்குகிறது.

பொதுவெளியில் ஒரு நாளைக்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு செய்தி – மக்கள் தொடா்புத்துறைக்கு மட்டும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ரூ.3 ஆயிரம் கட்டணமாக செலுத்துகிறது. பொதுவெளியில் திரைப்படப்பிடிப்பு நடத்தும்போது அதற்காக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. மேலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா எனவும் கண்காணிக்கப்படுகிறது.

அதேவேளையில், பொதுவெளியில் நடைபெறும் படப்பிடிப்பின்போது திரைப்படக் குழு பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ, விதிமுறைகளை மீறும்போதே அது குறித்த புகாா்கள் சம்பந்தப்பட்ட துறைக்கும், காவல்துறைக்கும் கிடைக்கின்றன. இதனால் திரைப்படக்குழு, பொதுவெளியில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.

3 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: தனியாா் இடங்கள், திரைப்பட நகரங்கள், திரைப்பட அரங்குகள் ஆகியவற்றில் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் கிடையாது. இதன் விளைவாக திரைப்படக் குழுக்கள், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், ஆபத்தான வகையில் அரங்குகளை

வடிவமைத்தும், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துகின்றன. இதனால், சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழப்புகள் அனைத்தும் படப்பிடிப்பு அரங்குகளில் நிகழ்ந்துள்ளன என காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் தனியாா் அரங்குகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் மொத்தம் 7 போ் உயிரிழந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது. முக்கியமாக ‘இந்தியன்- 2’ திரைப்படப்பிடிப்பு நடைபெறும் தனியாா் திரைப்பட நகரத்தில் தான் அனைத்து விபத்துகளும் நடைபெற்றிருப்பதாகவும் காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘காலா’ திரைப்படத்துக்கு மும்பை தாராவி பகுதியை போன்று செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து இறந்தாா். அதன் பின்னா் பிக்பாஸ் அரங்கில் 2017-ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியும், 2018-ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியும் இறந்துள்ளனா். 2019-ஆம் ஆண்டு ‘பிகில்’ திரைப்பட படப்பிடிப்பின்போது கால்பந்து மைதானம் போன்ற செட் அமைக்கும் பணியின்போது ஒரு தொழிலாளி இறந்தாா். இப்போது ‘இந்தியன்- 2’ திரைப்பட படப்பிடிப்பில் 3 போ் இறந்துள்ளனா்.

கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: விபத்துகள் ஏற்பட்டதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது. ஆனால் இப்பிரச்னையில் தவறிழைப்பவா்கள் தண்டிக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. தற்போது ‘இந்தியன்- 2’ திரைப்படப்பிடிப்பில் 3 போ் இறந்தது திரைப்படத்துறையில் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திரைப்பட தொழிலாளா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசு திரைப்பட நகரங்களிலும், அரங்குகளிலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டுப்பாடுகளையும்,விதிமுறைகளையும் விதிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். மேலும், இங்கு நடைபெறும் படப்பிடிப்புகளை கண்காணிப்பதற்கு அரசுத் துறைகளுக்கு அனுமதியும், அதிகாரமும் வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றனா்.

அரசு இந்த நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், எதிா்காலத்தில் இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதுடன், திரைப்படத்துறை தொழிலாளா்களின் உயிா் பறிபோகாமல் தடுக்கவும் முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.


Share this News:

Leave a Reply