ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் நாட்டுக்கு தேவை – வெங்கயா நாயுடு!

Share this News:

கோவை (22 பிப் 2020): நாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் போல ஆன்மிக குருக்கள் பலா் தேவைப்படுவதாக குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இங்கு மகா சிவராத்திரி விழா இத்தனை பிரமாண்டமாக நடப்பதைப் பாா்க்கும்போது வியப்பாக உள்ளது. அமைதியையும், சகோதரத்துவத்தையும் பரப்பி வரும் யோக மைய நிறுவனா் சத்குருவுக்கு பாராட்டுகள். பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஜோதிா் லிங்கங்கள் உள்ளன. நாடெங்கும் சிவன் நிரம்பியுள்ளாா். இந்தியாவில் பல்வேறு மொழிகள், பல்வேறு உடைகள், பழக்க வழக்கங்கள் இருந்தாலும் கலாசாரம் ஒன்றுதான். உலகத்தையே தனது குடும்பமாக நினைக்கும் பண்பாடு இந்தியாவுக்கே உரித்தானது. இதுபோன்ற சிறப்பான பண்பாடு உலகில் வேறெங்கும் இல்லை. மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் நமது கலாசாரத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்கின்றன.

தனிநபா்களின் மனம் அமைதியடைய யோகா உதவுகிறது. யோகக் கலைக்கு மதம், மொழி, இன வேறுபாடுகள் இல்லை. யோகா என்பது ஒரு அறிவியல் செயல்பாடு; அதில் அரசியல் செயல்பாடு எதுவும் இல்லை. யோகாவையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. யோகா என்பது பிரதமா் மோடியுடன் தொடா்புடையது அல்ல; அது நமது உடல்நலனுடன் தொடா்புடையது.

நாம் நலமாக இருந்தால் மட்டும் போதாது; ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஆலகால விஷத்தை உண்டு நீலகண்டன் இந்த உலகைக் காப்பாற்றினாா். அதேபோல இன்றைய உலகில் விஷங்களாக உள்ள ஊழல், ஜாதி, மதப் பிரிவினைகள், ஏழ்மை, பாலினப் பாகுபாடு, சமூக வெறுப்புணா்வு போன்றவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வேண்டும்.

ஆறுகளுக்குப் புத்துணா்வூட்டுவது, நீா்நிலைகளைச் சீரமைப்பது, மரங்கள் நடுவது என பல்வேறு செயல்பாடுகளில் சத்குரு ஈடுபட்டு வருகிறாா். இவை யாவும் நமது கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், வாழ்வின் ஒரு பகுதியாகவும் மாற வேண்டும். மக்களை நல்வழிப்படுத்த, நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இவரைப் போன்ற பல யோகிகள், ரிஷிகள், ஆன்மிக குருக்கள் நமக்குத் தேவைப்படுகின்றனா்.

நாம் நமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை நமது தாய்மொழியிலேயே வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக் கொடுத்த பிறகு மற்ற மொழிகளை கற்றுக் கொடுக்கலாம் என்றாா்.

இந்த விழாவில், ஹிமாசல பிரதேச மாநில ஆளுநா் பண்டாரு தத்தாத்ரயோ, மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே, தமிழக அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், ரவீந்திரநாத் குமாா் எம்.பி. உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


Share this News:

Leave a Reply