தமிழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் வேறுபாடு இல்லை – திருமாவளவன்!

Share this News:

திருநெல்வேலி (08 ஜன 2023): நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். புத்தாத்மானந்தா சரசுவதி சுவாமி, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்னுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் வரவேற்று பேசினார். மக்கள் ஒற்றுமை மேடை மாநில அமைப்பாளர் பேராசிரியர் அருணன் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா பற்றி பேசினார்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும் அம்மா என்றாலும் ஒரே பொருள் தான். தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும், சூழ்ச்சியும் உள்ளது.

பிரதேசம் என்றாலும் ராஷ்டரியம் என்றாலும் நாடு என்றுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டிரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.

மகாராஷ்டிரம் என்று சொல்லக்கூடாது, பாரதம் என்று தான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா? கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்

பண்டிகைகள் ஆட்டம், பாட்டம், கூத்துக் கொண்டாட்டம் என இழுத்துச் செல்லும். சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்கவிடாமல் மயக்கும் மாயையை உருவாக்கும்.

கல்வி, சுகாதாரத்தை, மருத்துவத்தை தந்தது கிறிஸ்தவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின் தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும், குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ, பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேச வேண்டும், வரலாற்றை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன்.

அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


Share this News:

Leave a Reply