பெரியார் மீது அவதூறு பரப்பியதாக ரஜினி மீது போலீசில் புகார்!

சென்னை (18 ஜன 2020): நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு பரப்பியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, நாட்டுக்கு ‘சோ’ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை என்று பேசினார். அப்போது, “முரசொலி வைத்திருப்பவர்கள் திமுககாரர்கள், துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று அவர் பேசியதும், தந்தை பெரியார் பேரணி குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு மற்றும் வதந்தியை நடிகர் ரஜினிகாந்த் பரப்பியதாகக் கூறி, திராவிடர் விடுதலை கழகம் சார்பாக கோவை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், ‘கடந்த 14-01-2020 அன்று சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 505 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply