முருகன் கோவிலுக்கு மின்தூக்கி வசதி – சட்டசபையை ஈர்த்த ஜவாஹிருல்லாவின் கோரிக்கை!

Share this News:

சென்னை (12 ஏப் 2022): சுவாமிமலை முருகன் கோவிலுக்காக இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்து கோரிக்கை வைத்த நிகழ்வு சட்டசபையில் இருந்த மற்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, முருகனின் ஆறுபடை வீடுகளில் 4ஆம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வயதான பக்தர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமப்படுவதாகவும் அங்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுவாமிமலை முருகன் கோவிலில் ரோப் கார் அமைக்க சாத்தியக் கூறுகள் இருந்தால் இந்தாண்டே அதுகுறித்து பரிசீலித்து சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்த நிகழ்வை பேரவையில் இருந்த முதல்வர் ஸ்டாலின், பாஜக உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கவனித்து பார்த்தனர்.


Share this News:

Leave a Reply