திரைத்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கை – ஜவாஹிருல்லா!

Share this News:

சென்னை (19 ஏப் 2022): மனிதநேய மக்கள் கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த, சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்ககக் கோரியிருந்தார்.

இந்நிலையில் தி.இந்து இதழிற்கு அளித்த பேட்டியில் இது தமிழ் திரையுலகிற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என தெரிவித்துள்ளார்..

அவரது பேட்டி:

ஏன் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

நான் படத்தைப் பார்க்கவில்லை, ஆனால் எனது கட்சியைச் சேர்ந்த பலர் அதைப் பார்த்து அதைப் பற்றி என்னிடம் விளக்கியுள்ளனர். திரைப்படங்கள் ஒரு சக்திவாய்ந்த ஊடகம், மேலும் அவை நல்ல அல்லது கெட்ட வழியில் ஆழமான தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும். தமிழ்நாட்டு அரசியலில் திரைப்படங்கள் எப்படி மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், இது வெறும் திரைப்படம், அதனால் மக்கள் இதைப் புறக்கணித்துவிட்டு நகர வேண்டும் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. இத்திரைப்படம் முஸ்லிம்களை, பயங்கரவாதிகள் என்ற எதிர்மறையான பிம்பத்தை வளர்க்கிறது. முஸ்லிம்கள் தமிழ் சமூகத்தின் உள்ளார்ந்த அங்கம், முஸ்லிம் பயங்கரவாதிகள் வணிக வளாகத்தை கைப்பற்றுவதாகக் காட்டுவது முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை இளைஞர்கள் மனதில் விதைப்பதாகும். இது மாநிலத்தின் சமூக கட்டமைப்பை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

OTT யுகத்தில் ஒரு எளிய தடையின் மூலம் பொதுமக்கள் திரைப்படத்தைப் பார்ப்பதைத் தடுக்க முடியுமா?

இன்று பல தளங்கள் உள்ளன, அதை மக்கள் பார்ப்பதை தடை செய்வதால் தடுக்க முடியாது என்பது உண்மைதான். எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்களை தயாரிப்பதற்கு எதிரான எச்சரிக்கையாக இது அமையும்.

விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கிக்கு எதிராக உங்கள் கட்சி முன்னெடுத்த எதிர்ப்புகள் கடுமையானதாக இருந்ததே?

மக்கள் ஏற்கனவே பீஸ்ட் படத்தை நிராகரித்ததாகத் தெரிகிறது. படம் நன்றாக ஓடியிருந்தால், அதற்கு எதிராகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். படத்தின் உள்ளடக்கம் குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நான் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கூறவில்லை ,மற்றவர்களும் அப்படித்தான் விமர்சிக்கின்றனர்.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்ததால் கடிதத்தோடு நிறுத்திக்கொண்டீர்களா?

இல்லை. இதுபற்றி நான் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் பீஸ்ட் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை விட இது ஒரு சக்தி வாய்ந்தது என்று நினைக்கிறேன். முதலமைச்சருக்கு நான் கடிதம் எழுதியதால் செய்தி சேனல்கள் இந்த விவகாரத்தை விவாதித்தன. படத்தை யார் தயாரிப்பது அல்லது விநியோகிப்பது என்பது முக்கியமல்ல. இது பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகவில்லை, எனவே இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்த விரும்பவில்லை.

திரைப்படங்களைத் தடை செய்யக் கோருவதைத் தவிர,இதனை தவிர்க்க வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டனவா?

நாங்கள் ஏற்கனவே பல திரைப்பட தயாரிப்பாளர்களுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். விஸ்வரூபத்திற்கு எதிரான போராட்டங்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. துப்பாக்கிக்குப் பிறகு பல படங்கள் முஸ்லிம்களை எதிர்மறையாக சித்தரிக்கவில்லை. உண்மையில், முஸ்லிம்களை நேர்மறையாக சித்தரிதற்காக மாநாடு போன்ற படங்களைப் பாராட்டியுள்ளோம்.


Share this News:

Leave a Reply