பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது – ஜவாஹிருல்லா!

Share this News:

சென்னை (21 பிப் 2022): பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள், எழுத்தாளர்கள்ள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு ஹிஜாப் அணிவித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றி தமது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய் ஹிஜாப் வழக்கில் வாதாடியவர்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் இருந்தார் என்பதே இந்த மண்ணில் சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்பதற்கான சாட்சி.

பாசிச சங்பரிவார சக்திகளை அனைத்து சமூக மக்களும் ஓரங்கட்டும் நல்ல சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூணூல் அறுக்கும் போராட்டம் என்று ஒரு சிலர் அறிவிப்பது கயமைத் தனமானது. சமூக அமைதியை சீர்குலைக்க கூடியது.

வெகுஜன மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக பகைமையை கூர் தீட்டும் இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. அனைத்து மக்களாலும் புறந்தள்ள படவேண்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply