விக்னேஷ் உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தச் சென்றபோது என்ன நடந்தது?

Share this News:

அரியலூர் (13 செப் 2020): அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். விக்னேஷ் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றபோது, அங்கிருந்த பாமகவினர் உதயநிதிக்கு எதிராக கோஷமிட்டதோடு அவரை விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் கூறுகையில், நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் விக்னேஷ் இறந்த செய்தி வெளியான போது, தி.மு.கவின் பொதுக்குழு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்த உடனேயே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதே போல உதயநிதி அவர்களும் ட்வீட் வெளியிட்டார்கள்.

முதல் நாள் தான் தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உதயநிதி தலைமையில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க கரொனா பெயரை சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதிர்காலத் தலைமுறைக்காக போராடிக் கொண்டிருந்தார் உதயநிதி.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்றாலே எதிர்ப்பு தெரிவிப்பார் உதயநிதி. குறிப்பாக “நீட் தேர்வு” என்றால் அவருடைய எதிர்ப்பு கடுமையாக இருக்கும். மாணவி அனிதாவின் மறைவு அவரை மிகவும் பாதித்து விட்டது.

தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா, உதயநிதியோடு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தவர். அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, உதயநிதியின் கடும் நீட் எதிர்ப்பு குறித்து பேசினேன். “நீங்களும் கவனிச்சீங்களா? பிரச்சாரங்களில் நகைச்சுவையா பேசிக்கிட்டிருப்பார். அனிதா, நீட்ன்னு ஆரம்பிச்சா மனுஷன் அப்படியே மாறிடுவாரு. எமோஷனல் ஆயிடுவாரு”, என்று தன் அனுபவத்தை கூறினார் அப்துல்லா.

விக்னேஷ் மறைவு குறித்த செய்தி வந்த உடனேயே எனக்கு அப்துல்லா கூறியது தான் நினைவுக்கு வந்தது.

பொதுக்குழு கூட்டம் முடிந்து, இலந்தங்குழி கிராமத்திலுள்ள விக்னேஷ் வீட்டிற்கு பயணமானேன். விக்னேஷ் தந்தை விஸ்வநாதனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தேன். அலைபேசி அழைப்பு. மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன், எம்.எல்.ஏ அழைத்தார். விக்னேஷ் மரணம் குறித்து விசாரித்தார். “உதயநிதி இது குறித்து பேசினார். மிகுந்த வருத்தமாக பேசினார்”, என்றார்.

மறுபடியும் காலை அழைத்தார். “விக்னேஷ்க்கு அஞ்சலி செலுத்தனும்னு நினைக்கிறார் உதயநிதி. ஆனா யாருக்கும் சொல்ல வேண்டாம் என சொல்லிட்டார். கூட்டம் கூடி விக்னேஷ் குடும்பத்திற்கு சங்கடம் ஏற்படக் கூடாதுன்னு நினைக்கிறார்”, என்றார் எழிலரசன்.

கொஞ்ச நேரத்தில் உதயநிதியே அழைத்தார். “நான் கிளம்பி வர்றேன். ஆனா கூட்டம் கூடி அவர்கள் குடும்பத்திற்கு சங்கடம் ஏற்படாம பார்த்துக்குங்க”, என்றார். அது தான் அவரது குணம். நீட் தேர்வை எதிர்த்து உயிர் துறந்த குழுமூர் அனிதா வீட்டிற்கு வந்த போதும், இப்படி தான் நடந்து கொண்டார். அனிதா வீட்டில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் போல் அல்லாமல் மிக எளிமையாக நடந்து கொண்டார். தன்னுடைய வருத்தத்தை அவர்களோடு பகிர்ந்து கொண்டார். அதே போல் தான் விக்னேஷ் வீட்டிற்கும் வந்தார்.

காரில் செல்லும் போதே, விக்னேஷ் குடும்ப நிலவரங்களை கேட்டறிந்தார். நீட் தேர்வால் தொடர்ந்து ஏற்படும் மாணவர்களின் தற்கொலை குறித்து வருத்தப்பட்டார்.

செந்துறையை நெருங்கும் போதே தொடர் அலைபேசி அழைப்புகள். “உதயநிதி வருவதற்குள் விக்னேஷ் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பா.ம.கவில் ஒரு குரூப் துடிக்குது. அக்கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் தான் இந்த வேலைய செய்யறாங்க”.

மருதூரை தாண்டி இலந்தங்குழி கிராமத்தை அடைந்தோம். விக்னேஷ் வீட்டின் முன் இறங்கினோம். போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் “கொஞ்சம் இருங்க”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பத்து பேர் விக்னேஷ் உடலை கைப்பாடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். திமுகவினர் முன்னேறி செல்ல இருதரப்புக்கும் இடையே போலீஸார் நின்றனர்.

உதயநிதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வேண்டுகோளை ஏற்று அங்கேயே நின்று விட்டார். நான் முன்னேறி சென்று கூட்டத்தை விலக்கினேன். அதற்குள் உடலை தூக்கிக் கொண்டு, அமரர் ஊர்தியை நோக்கி ஓடியது அந்தக் கூட்டம். இறந்த விக்னேஷின் உடலுக்கு அவமரியாதை செய்தது அந்தக் கூட்டம். அவரது பெற்றோர் முழுமையாக சடங்கு செய்யக் கூட விடவில்லை அந்தக் கூட்டம். கேவலமாக நடந்து கொண்டார்கள்.

“பரவாயில்லை. நாம அவங்க அப்பா, அம்மாவ பார்த்து ஆறுதல் சொல்வோம்”, என்றார் உதயநிதி. அந்த பதற்ற சூழலிலும் கோபப்படாமல் முடிவெடுத்தார்.

வீட்டினுள் சென்றோம். அழுதுக் கொண்டிருந்த விக்னேஷின் அப்பா விஸ்வநாதனை தொட்டேன். நிமிர்ந்து உதயநிதியைப் பார்த்த விஸ்வநாதன் வெடித்து அழுதார். கையைப் பற்றிக் கொண்டார். “அய்யோ, தலைவர் மகன்லாம் வந்திருக்கீங்க. என் மகன் போய்ட்டான்யா”, என்று கதறினார். உதயநிதி அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார். அடுத்த அறையில் மயக்க நிலையில் இருந்த விக்னேஷின் அம்மாவை பார்த்து வேதனையடைந்தார்.

விக்னேஷ் தந்தையிடம் திமுக சார்பாக 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார். “தைரியமா இருங்க. உங்க இழப்புக்கு ஈடு கிடையாது. இருந்தாலும் தலைவர் தி.மு.க சார்பா இந்த உதவியை வழங்க சொன்னார். அடுத்த மகன நல்ல முறையில் படிக்க வைங்க. நாங்க உங்களுக்கு உறுதுணையா இருப்போம்”, என்று தேற்றினார்.

உதயநிதி நினைத்திருந்தால் அலைபேசியில் ஆறுதல் சொல்லி விட்டு சென்னையிலேயே இருந்திருக்கலாம். நீட் தேர்வை உணர்வுப்பூர்வமாக எதிர்ப்பவர் என்ற காரணத்தால் தான், 600 கிலோமீட்டர் பயணித்து நேரில் வந்து ஆறுதல் சொன்னார். அதிலும் முதல் நாள் தான் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை நடத்தி இருந்தார். அந்த உணர்வின் காரணமாகத் தான் பல்வேறு பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு வந்தார். அவரை அஞ்சலி செலுத்த விடாமல் செய்வதை ஏதோ பெரிய அரசியல் நடவடிக்கை என ஒரு கூட்டம் நடந்து கொண்டது வேதனை. விக்னேஷ் குடும்பத்தார் அல்லாத ஆட்கள் தான் இந்த செயலை செய்தவர்கள்.

நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து போராடும் இயக்கம், இனி போராடப் போகும் இயக்கமும் தி.மு.க தான். எதிர்காலத்தில் நீட் தேர்வை ரத்து செய்யப் போகும் இயக்கமும் தி.மு.க தான். அதன் பிரதிநிதி தான் உதயநிதி அவர்கள்.

விக்னேஷ் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் மத்திய, மாநில அரசுகள் தான். பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நோக்கில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள சுற்றுபயணத்தில் இருக்கிறார். மற்ற சில கட்சியினர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்கள். விக்னேஷுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தான் உணர்வோடு ஓடோடி வந்தார்.

தி.மு.க தான் எப்போதும் உதவிக்கு வரும், உறுதுணையாக இருக்கும்! இவ்வாறு கூறினார்.


Share this News:

Leave a Reply