நீட் தேர்வின் கொடுமை – அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்!

Share this News:

சென்னை (21 ஜூன் 2021): நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் மெயில் அனுப்பலாம் என அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை சண்முகம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

வீட்டின் வறுமையை தாண்டி அனிதா 12ம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலை சிறந்த 2 மருத்துவ கல்லூரிகளில் பயில்வதற்கு போதுமானது . ஆனால் நீட் தேர்வு வந்ததால் அனிதா மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனக் கூறியதால் அனைத்து தரப்பிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எனது மகளும் நாங்களும் துடிதுடித்து போனோம்.

நீட் தேர்வுக்கான போட்டியிலும் வாய்ப்பிலும் அனிதா போன்றவர்கள் முழுமையாக புறக்கணிக்கும் நிலையை அவர்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது . உணவுக்கு ரேஷன் கடைகளையே நம்பி இருக்கும் எங்களிடம் பல லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் செல்வதற்கு வசதியும் இல்லை, படிப்பதற்கு வசதிகளும் அருகாமையில் இல்லை.

12ம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற அனிதாவால் நீட் தேர்வில் ஏன் மதிப்பெண் பெற முடியவில்லை என்று கேள்வி கேட்கும் நீட் ஆதரவாளர்களிடம் தான் ஒரு கேள்வி எழுப்ப வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களால் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை. தான் படித்த பாடத் திட்டத்திலும் பயிற்சி பெற்ற தேர்வு முறையிலும் அனிதா சாதித்துள்ளார். மாநில அரசு நடத்திய தேர்வு எழுதி அதற்கு மாநில அரசே வழங்கிய மதிப்பெண்களும் அர்த்தமற்று போனதால் அனிதா உயிரை மாய்த்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இவ்வாறு அனிதாவின் தந்தை சண்முகம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply