மேற்கு வங்கத்தை உலுக்கிய உம்பன் புயல் – 72 பேர் பலி!

Share this News:

கொல்கத்தா (22 மே 2020): மேற்கு வங்கத்தைல் உம்பல் புயல் பாதிப்பால் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான உம்பன், நேற்று மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது.

அப்போது கொல்கத்தாவில் மணிக்கு 190 கிலோ மீட்டர் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்ததது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சூறைக்காற்று காரணமாக கொல்கத்தாவில் ஒரு மின்மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

அத்துடன் ஹவுரா பாலம் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. மழையின்போது கண்ணைப் பறிக்கும் அளவிற்கு மின்னல் வெட்டியது. கடும் சூறைக்காற்றால் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு நிவாரண முகாம்களுக்கு ஏராளமானோர் சென்றனர்.

தெற்கு 24 பர்கானாஸ், ஹவுரா, மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாபூர், சுந்தர்பன், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், சுமார் 5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஒரு பள்ளியின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது.

உம்பன் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழையால் கொல்கத்தா விமான நிலையம் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்தது. விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிகள், ஓடுபாதைகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழந்த நிலையில், விமான நிலைய மேற்கூரைகளும் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் சாலையில் முறிந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளும் துரித கதியில் நடைபெறுகின்றன.

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 4 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனிடையே, ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கன்ஜம், புரி உள்ளிட்ட இடங்களிலும் உம்பன் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் பாதிப்பு சற்று குறைவு என்பதால், பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. பாலசோர் பகுதியில் தெருவோரக் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உம்பன் புயலால் அசாம் மற்றும் மேகலாயா மாநிலங்களிலும் மிக கனமழை பெய்தது.

உம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஒடிசாவில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை விட மோசமான பாதிப்பை உம்பன் புயல் ஏற்படுத்தியிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அனைத்தையும் மறுசீரமைக்க மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உம்பன் புயல் தாக்கத்தல் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற பேரழிவை இதற்குமுன் தான் பார்த்ததில்லை எனக் கூறியுள்ள அவர், பிரதமர் புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Share this News: