எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 06 – வீடியோ!

Share this News:240p Mobile Version For Download Click Here

அலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்வதற்கான முயற்சி நடக்கிறது. அதிலிருந்து அவர் தப்பிக்கிறார். கொலையாளியை விரட்டி செல்லும்போது, டெம்ப்ளர்களின் கையாள் தளபதி நாசிர் அவனைப் பிடித்து எர்துருல் கையில் சிக்காமல் இருப்பதற்காக கொலை செய்துவிடுகிறார். இதனால் எர்துருலுக்கு நாசிர் மீது சந்தேகம் வருகிறது.

எர்துருலைக் கொலை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கொந்தளிக்கும் டைட்டஸ், அவர் கேட்டு வந்த நிலத்தைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய தளபதி நாசிரிடம் சொல்கிறார். டெம்ப்ளர்களின் படைதளத்தின் அருகேயுள்ள அந்த நிலத்தில் காயிகள் குடியேறும்போது, எர்துருலுடன் மொத்த காயி கோத்திரத்தையுமே அழித்துவிடலாம் என்பதற்காக இம்முடிவுக்கு வந்ததாக கூறுகிறார். எர்துருல் கேட்டு வந்த நிலத்தைத் தந்து அங்கு வசிக்க காயி கோத்திரத்தினருக்கு அனுமதிக்கிறார், எல் அஜீஸ் .தாங்கள் குடியேற புதிய நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் வெற்றியோடு கோத்திரத்துக்குத் திரும்புகிறார், எர்துருல் !

கோத்திர தயாரிப்புக்களை விற்பதற்கான வியாபாரப் பயணத்துக்குரிய ஏற்பாடுகளில் குண்டோக்டு மூழ்குகிறார். கரடோய்கர் வியாபாரக் கூட்டத்தின்மீது தாக்குதல் நடத்த இருப்பதால், அப்பயணத்துக்குத் தலைமை தாங்குவதிலிருந்து குண்டோக்டுவை விலக்கச் செய்ய குர்தோக்லு முயற்சி செய்கிறார். ஆனால், அதிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக நிற்கிறார் குண்டோக்டு.

வியாபாரத்துக்கான விரிப்புகள் தயாரிக்கும் பணியில் உதவும் ஹலீமா – வுக்கு நல்ல பெயர் கிடைக்காமல் இருக்க, துணிகளை வெளுக்க வைத்திருந்த கலவையில் மூலிகைகளைக் கலந்துவிடுகிறார் செல்சன். இதனால் துணிகள் எதுவும் வெளுக்காமல் கெட்டுப்போகிறது. அய்கிஸும் ஹலீமாவும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அதே சமயம், வியாபாரத்துக்குக் கொண்டு செல்ல தரமான விரிப்புகளைச் சரியான நேரத்தில் தயார் செய்து கொடுத்து அன்னை ஹேமிடம் நல்ல பெயர் வாங்குகிறார் செல்சன். ஹலீமாவால் குறிப்பிட்ட நேரத்துக்குள் இனி தயார் செய்ய இயலாது எனவும் அதனால் முயற்சியைக் கைவிடும்படியும் கூறுகிறார் ஹேம். ஆனால், மறுநாள் கேரவன் புறப்படும் முன்னர் தயாரித்துவிடுவதாக வாக்குறுதியளிக்கிறார், ஹலீமா!

எர்துருலைக் கொல்வதில் தோல்வியுடன் திரும்பிய டைட்டஸ், காயிகளுக்கு டெம்ப்ளர்களின் படைத்தளம் அருகில் நிலம் கொடுக்க வைக்க நாசிரிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாக உஸ்தாத் ஆஸமிடம் சொல்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடையும் உஸ்தாத், காயிகள் தம் எல்லைப் பகுதியில் குடியேறுவது சிலுவைபடையினரின் ஜெரூசலேமுக்கான பாதையில் முட்டுக்கட்டையினை எதிர்காலத்தில் ஏற்படுத்துமெனவும் என்ன விலைகொடுத்தாவது அவர்களை அங்குக் குடியேறுவதிலிருந்து தடுக்க வேண்டுமெனவும் உத்தரவிடுகிறார்.

முஸ்லிமாக மாறிய தம் சகோதரரை டெம்பளர்கள் கோட்டையின் நிலவறையில் அடைத்து வைத்துள்ளார் உஸ்தாத் ஆஸம். சிலுவைப் படையினரிடமிருந்து கைப்பற்றிய புனிதச் சின்னங்கள் அடங்கிய பெட்டியொன்று இப்னு அரபியின் கைவசம் இருக்கிறது. அதனைத் திரும்பவும் கைப்பற்றுவது உஸ்தாதின் எண்ணம். அதற்கு, இப்னு அரபி வழிகாட்டலில் முஸ்லிமான தம் சகோதரர் உதவாததாலேயே சிறையில் அடைத்துள்ளார், உஸ்தாத் ஆஸம்.! அவரை முஸ்லிம்கள் கொன்றுவிட்டதாக, அவரின் இரு மகள்களிடம் பொய்க்கூறி ஏமாற்றி நம்பவைத்திருக்கிறார் உஸ்தாத்.

காயி கோத்திரத்தின் வியாபாரப் பொருட்கள் விற்பனைக்குக் கொண்டு செல்ல கேரவன் புறப்படும் நேரத்தில், ஹலீமா கூறியபடி தரமான விரிப்புகளைத் தயாரித்து கொண்டுவருகிறார். கேரவன் புறப்படுகிறது.

செல்சனின் சகோதரி கோக்சேவை எர்துருலுக்குத் திருமணம் செய்துவைக்க அன்னை ஹேம் செல்சனிடம் பேசுகிறார். கேரவன் செல்லும் வழியில் கரடோய்கரின் ஆட்கள் தாக்குதல் நடத்தி மொத்தப் பொருட்களையும் கொள்ளையடிப்பதோடு, குண்டோக்டுவையும் சிறைபிடிக்கின்றனர்.

–தொடரும்

எர்துருல் சீசன் 1 தொடர் 5 | எர்துருல் சீசன் 1 தொடர் 7


Share this News:

Leave a Reply