எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 11- வீடியோ!

Share this News:

குர்தோக்லுவின் திட்டம்-செல்சானின் எண்ணம்-எர்துருலின் விருப்பம்!240p Mobile Version For Download Click Here

கரடோய்கரிடமிருந்து தம் கோத்திரத்தின் வியாபாரப் பொருட்களையும் மகன் குண்டோக்டுவையும் மீட்டதோடு, கரடோய்கரையும் கைது செய்து கொண்டு வருகிறார் சுலைமான் ஷா. ஆனால், கோத்திரத்தில் அவர் இல்லாத சமயம் தலைமையக சின்னங்களெல்லாம் அவர் கூடாரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

தாமில்லாதபோது கோத்திரத்தில் நடக்கும் விசயங்களைக் கண்காணித்து செய்திதர நியமித்த தம் தம்பி துந்தர் மூலம், ஹலீமா-வின் கூடாரத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம் முழுவதையும் எர்துருல் அறிகிறார். அதனைச் செய்தவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க விசாரணை நடக்கிறது.

இதனை அறியும் குர்தோக்லு, தம்மால் தூண்டிவிடப்பட்ட பேபோராவைச் சிறிது காலம் தலைமறைவாக இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கிறார். அத்துடன், தலைமையகத்திலிருந்து எடுத்து வந்த தலைவருக்குரிய அடையாளச் சின்னங்களை மீண்டும் சுலைமான் ஷா கூடாரத்திலேயே கொண்டு போய் வைக்கிறார்.

ஹலீமா-வும் எர்துருலும் தனிமையில் சந்திப்பதையும் எர்துருல் ஹலீமா-வுக்குக் குதிரை பரிசளிப்பதையும் பார்க்கும் கோக்சே, தம் சகோதரி செல்சானிடம் இதனைத் தெரிவித்து அழுகிறார். ஆத்திரம் கொள்ளும் செல்சான், ஹலீமா-வை எப்படியாவது கோத்திரத்திலிருந்து வெளியேற்றிவிட நினைக்கிறார்.

தாம் கொண்டு சென்ற வியாபார கேரவனை இழந்த அவமானம் தாங்காமல் இருக்கும் குண்டோகு, அலெப்போ பயணத்தில் வெற்றியுடன் திரும்பியதோடு தம்மையும் வந்து காப்பாற்றி பெயரெடுக்கும் எர்துருல் விஷயத்தில் பொறாமையும் எரிச்சலும் கொள்கிறார். இச்சூழலைப் பயன்படுத்தி, செல்சான் குண்டோக்டுவைத் தூண்டி விடுகிறார்.

தலைமையக சின்னங்களைத் தம் கூடாரத்திலிருந்து அகற்றியது, ஹலீமா கூடாரத்தில் கல்லெறிந்தது முதலான
விஷயங்கள் குறித்து குர்தோக்லுவிடம் சுலைமான் ஷா விளக்கம் கேட்கிறார். கோத்திரத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவே பே-க்களின் அவையினைக் கூட்டியதாகவும் அன்னை ஹேமுக்குத் தொந்தரவு தராமல் இருக்கவே தலைவரின் சின்னங்களைத் தம் கூடாரத்துக்கு மாற்றியதாகவும் கூறி சமாளிக்கிறார் குர்தோக்லு. அதனை நம்பும் சுலைமான் ஷா, கரடோய்கர் விஷயத்தில் தலைமையக ஆலோசனை கூட்டத்தில் தமக்கு ஆதரவாக இருக்கும்படி குர்தோக்லுவிடம் கேட்டுகொள்கிறார்.

தம் கோத்திரத்திலேயே விசாரித்து தண்டனை நிறைவேற்றுவதைவிட, டெம்ப்ளர்களுடன் கூட்டணி சேர்ந்து கரடோய்கர் நடத்திய குற்றங்களை விளக்கி, சுல்தான் அலாவுதீனிடம் கரடோய்கரை ஒப்படைத்து விடுவது சிறந்தது என சுலைமான் ஷா கருதுகிறார். கரடோய்கரைத் தலைநகர் கொன்யாவுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு நடக்கிறது.

இந்நிலையில், டெம்ப்ளர் கமான்டர் டைட்டஸ் குர்தோக்லுவைச் சந்தித்து கரடோய்கரைக் காப்பாற்றுவதற்கு உதவக் கேட்கிறார். அதற்கான உதவி செய்வதாக குர்தோக்லு கூறுகிறார்.

காயி கோத்திரத்தின் தலைமை பதவிக்குக் கனவு காணும் குர்தோக்லுவின் அடுத்தத் திட்டம் என்ன, தம் கணவனைக் காயி கோத்திரத்தின் தலைவனாக்கவும் தம் தங்கையை எர்துருலுக்குத் திருமணம் செய்து வைக்கவும் நினைக்கும் செல்சானின் எண்ணம் நடக்குமா, தம் கோத்திரத்தைச் சேராத பெண்ணான ஹலீமா-வுடனான எர்துருலின் விருப்பம் என்னானது, கரடோய்கரைச் சுல்தான் அலாவுதீனிடம் ஒப்படைப்பதிலிருந்து டெம்ப்ளர்கள் காப்பாற்ற என்ன செய்தார்கள் முதலான எதிர்பார்ப்புகளுடன் இப்பகுதி நிறைவடைகிறது.

தொடரும்..

எர்துருல் சீசன் 1 தொடர் 10


Share this News:

Leave a Reply