எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 1- வீடியோ!

Share this News:


240p Mobile Version For Download Click Here

தை கி.பி. 1225 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகிறது. இக்காலக் கட்டத்தில் கிழக்கிலிருந்து செங்கிஸ்கானின் பரம்பரையிலுள்ள மங்கோலியப் படை காஸ்பியன் கடல் பகுதி தாண்டி, அனடோலியா என்ற ஆசியா மைனர் பகுதியைக் கைப்பற்ற அதன் எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமக்கு அடிபணியாமல் எதிர்ப்பவர்களையும் அவர்கள் வசிக்கும் இடத்தையும் மொத்தமாக எரித்துச் சாம்பலாக்குவது மங்கோலியப் படையின் அடையாளம். இன்று துருக்கியாக பரிணமித்துள்ள அன்றைய அனடோலியா பகுதியினை செல்ஜுக் அரச வம்சத்தின் சுல்தான் அலாவுதீன் ஆட்சி செய்து வருகிறார். இவர்களுக்குக் கீழே பல நூற்றுக்கணக்கான நாடோடி கோத்திரங்கள் சிறு சிறு குழுக்களாக தத்தமது தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். எல்லையில் மங்கோலியர்களின் தாக்குதலுக்குப் பயந்து துருக்கிய நாடோடி கோத்திரங்கள் ஆங்காங்கே சிதறிப் போகின்றன.

அவற்றில் காயி எனும் பெயரில் அறியப்படும் நாடோடி கோத்திரத்தின் தலைவர் சுலைமான் ஷா. அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள். மூத்தவர் சுங்குர்டெகின். இரண்டாமவர் குண்டோக்டு என்ற குண்டோகு. மூன்றாமவர் எர்துருல்.நான்காமவர் துன்தார்.

மங்கோலியப் படையெடுப்பில் நேருக்கு நேரான தாக்குதலின்போது சுங்குர்டெகின் காணாமல் போய்விட்டார். மற்ற இருவரும் கோத்திரத்தில் பெற்றோருடன் உள்ளனர். இதில், எர்துருல் வேட்டை பிரியர். குண்டோக்டு கோத்திரத் தலைமைக்காக காத்திருப்பவர். இவரின் மனைவி செல்சன். அவரின் தங்கை கோக்சே. எர்துருலின் தந்தையும் இந்த இரு பெண்களின் தந்தையும் ஒன்றாக வளர்ந்த நண்பர்கள். சுலைமான் ஷா முதுகில் கொண்ட தீப்புண்ணினால் சோர்வுற்று தளர்ந்துள்ளார். அதே சமயம். இக்கோத்திரம் வாழும் இடம் குளிர் காலத்துக்கு வாழ உகந்ததல்ல. குளிர் காலம் நெருங்குவதால், உடனடியாக அவர்கள் நல்ல மேய்ச்சல் வசதியுள்ள இடத்துக்கு இடம்பெயர்ந்தாக வேண்டும். கோத்திரத்தில் பஞ்சமும் பட்டினியும் வாட்டுகிறது. இத்தகைய சூழலில் இருந்துதான் முதல் பகுதி தொடங்குகிறது.

கதை ஆரம்பமாகும் இடத்தில், எர்துருல் வேட்டைக்குச் செல்கிறார். மானை வேட்டையாட முனைகையில் தந்தை, இளவயது மகள் மற்றும் அவரின் சிறு வயது மகன் ஆகியோரைச் சிலர் தாக்குவதைப் பார்த்து அவர்களைக் காப்பாற்றி கோத்திரத்துக்கு அழைத்து வருகிறார். தாக்கியப் பின்னர்தான், அவர் சிலுவைப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வருகிறது. பெரும் ஆபத்து வரப்போவதாக கோத்திரத்தினர் பேசிக் கொள்கின்றனர். எர்துருல் பாதுகாத்து அழைத்து வந்தவர்கள் தம்மை வர்த்தகர் என்றும் மத்தியத் தரைக்கடல் பயணத்தின்போது சிலுவைப்படையினர் அவர்களைத் தாக்கி, அடிமை சந்தையில் விற்பதற்காக கடத்திச் சென்றதாகவும் கூறுகிறார்கள்.

கோத்திரம் இடம்பெயர்வதற்கு ஏற்ற இடமாக, பாக்தாதின் அய்யூபி அரச வம்சத்தினரின் ஆளுகைக்கு உட்பட்ட அலெப்போ நகரத்தைக் குண்டோக்டு முன்மொழிகிறார். அலெப்போவுக்கு எல் அஜீஸ் அமீராக இருக்கிறார்.

காயி கோத்திரத்துக்கு வியாபாரி ஒருவர் வருகிறார். அவருடன் காது கேட்காத ஊமை வேலைக்காரர் ஒருவரும் வருகிறார். முஸ்லிம் உலகிலும் பிற இடங்களிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து அந்த வியாபாரியிடம் சுலைமான் ஷா கேட்டறிகிறார். ஜெரூசலத்தைக் கைப்பற்ற டெம்ப்ளர்கள் போடும் திட்டங்கள், முஸ்லிம் அரசுகளுக்கிடையே இருக்கும் பொறாமையிலான உட்பூசல்கள் பற்றியெல்லாம், சுலைமான் ஷாவுக்கு எடுத்துரைக்கிறார், அந்த வியாபாரி!

காயி கோத்திரத்திலிருந்து வெகு தொலைவில், அமனோஸ் மலைகளின் மீது டெம்ப்ளர்களின் கோட்டை உள்ளது. அங்கிருந்துகொண்டு, உஸ்தாத் அஸாம், கமான்டர் டைட்டஸின் உதவியுடன் முஸ்லிம் அரசுகளுக்குள் பிரச்னையை உருவாக்கி அவர்களைத் தமக்குள் அடித்துக் கொள்ள வைக்க சதி வேலைகள் செய்து வருகிறார். ஜெரூசலத்தைக் கைப்பற்றுவதற்காக, முதலில் முஸ்லிம்களுக்குள் பகைமையை உருவாக்கி அவர்களைத் தமக்குள் அடித்துக் கொள்ள வைத்தால், தனது சூழ்ச்சி இலகுவாகிவிடும் என்பது அவரின் திட்டம். அதற்காக, செல்ஜுக் அரசின் சுல்தான் அலாவுதீனின் அரண்மனையிலும் நீதிமன்றத்திலும் தமக்கு ஆதரவானவர்களை உள்ளே நுழைப்பதற்கான வேலைகளைச் செய்வது குறித்து இருவரும் பேசி கொள்கின்றனர்.

காயி போன்ற துருக்கி கோத்திரங்கள் சிறியவையாக இருந்தாலும் தம் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைக் காக்க உயிரையும் துச்சமாக நினைத்து போரிடும் அவர்களின் வீரர்களான ஆல்ப்ஸ்-களால் அவை பலம்பொருந்தியவையாகவும் உள்ளன. இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக அப்பகுதிக்குத் தம் தளபதி கரடோய்கரை வரி வசூலிக்க நியமித்துள்ளார் செல்ஜுக் அரசின் சுல்தான் அலாவுதீன். டெம்ப்ளர்களுடன் கூட்டணி போட்டு அடிமைகளை வாங்கி உல்லாசம் அனுபவித்து வரும் துரோகிதான் இந்த கரடோய்கர்,

இச்சம்பவங்களுடன் முதல் பாகம் நிறைவுறுகிறது.

எர்துருல் தொடர் அறிமுகப் பதிவு | எர்துருல் சீசன் 1 தொடர் 2


Share this News:

Leave a Reply