ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் உத்திரவாதம் கொடுத்த நடிகை – மகிழ்ச்சியில் ஷாருக் வீடு!

Share this News:

மும்பை (29 அக் 2021): நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைதாக சிறையிலடைக்கப் பட்ட நிலையில் அவர் இன்று ஜாமீனில் விடுதலையானார்.

நேற்று ஜாமீன் கிடைத்தாலும் ஜாமீன் நகல் இன்றுதான் கிடைத்தது. ஆர்யன் கான் வழக்கறிஞரிடம் நீதிமன்ற பதிவாளர் தீர்ப்பின் நகலை இன்று மதியம் வழங்கினார். ஐந்து பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகலில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஆர்யன் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால், அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும். நீதிமன்ற விசாரணை குறித்து ஊடகங்களுக்கு எந்தவித அறிக்கையும் வெளியிடக்கூடாது. சக குற்றவாளிகளுடனும், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்களிடமும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், சாட்சியைக் கலைக்கவோ அல்லது சாட்சியிடம் பேசி தனக்குச் சாதகமாக மாற்றுவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது என்றும், நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

அதே போல், பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும், வெள்ளிக்கிழமைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அழைக்கும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மொத்தம் 14 நிபந்தனைகளை நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆர்யன் உட்பட 3 பேரும் தலா ரூ.1 லட்சம் சொந்த ஜாமீனிலும், அந்த தொகைக்கு தனி நபர் அல்லது இருவரின் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கும்படி தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகை ஜூஹி சாவ்லா ஆர்யன் ஜாமீனில் வெளிவர ரூபாய் ஒரு லட்சத்துக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

ஆர்யன் கான் உள்பட போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 3 பேரும், இன்று சிறையிலிருந்து விடுதலையான நிலையில் ஷாருக்கான் வீடு இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது… ரசிகர்கள் திரண்டு அவர் வீட்டு முன்பு கூடி வருகின்றனர்.. பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஷாருக்கானின் இன்னொரு மகன் ஆப்ரஹாம், தன் வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.


Share this News:

Leave a Reply