வேளாண் சட்டங்களுக்குத் தடை – விவசாயிகள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா?

Share this News:

த்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி டெல்லியில் கடந்த 49 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தினிடையே 50 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. டெல்லியினுள் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாமல் இருக்க, டெல்லியின் நுழைவாயில் சாலைகள் அனைத்தும் காவல்துறையினரால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் அசராமல் விவசாயிகள் கடுமையான குளிரிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வந்தனர்.

தாங்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்குபவை தான் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. போராட்டத்தைக் கைவிட இதுவரை விவசாய அமைப்புகளிடம் மத்திய அரசு 8 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளது. எனினும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. சட்டங்களை நடைமுறை படுத்துவதிலிருந்து பின்வாங்க மத்திய அரசு தயாராக இல்லை. சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டத்தைக் கைவிட விவசாயிகளும் தயாராக இல்லை. இந்த இழுபறி நிலையில், விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து மத்திய அரசுக்குப் பெரும் கெட்டப்பெயரை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுக எம் பி திருச்சி சிவா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் எம் பி மனோஜ் ஜா உள்ளிட்ட பலர் புதிய மூன்று வேளாண் சட்டங்களும் அரசியலமைப்புக்கு எதிரானவை; அவற்றைச் செல்லத்தக்கது அல்ல என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையில், மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்ததோடு, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைபடுத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததோடு விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பினை மத்திய அரசு வரவேற்றுள்ளதோடு, நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்களும் விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால், இது நிஜத்தில் விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி தானா? உண்மையில் நடந்தது என்ன, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறும் சாரம்சபடி அடுத்து நடக்கப்போவது என்ன என்பதைக் காண்போம்.

இதுவரை பல்வேறு ஆட்பணைக்குரிய சட்டங்களை மக்களிடையிலோ பிற அரசியல்கட்சிகளிடையிலோ எவ்வித விவாதமும் நடத்தாமல், நாடாளுமன்றத்திலிருக்கும் அறுதிபெரும்பான்மை உறுப்பினர்களின் பலத்தில் பாஜக அரசு பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவற்றுக்கு நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்கள் வந்தபோதிலும் சி ஏ ஏ சட்டத்துக்குப் பின்னர் நாடு தழுவிய பெரும் போராட்டம் இப்புதிய 3 வேளாண் சட்டங்களுக்கும் மட்டுமே எழுந்தது. டெல்லியில் நடந்த சி ஏ ஏ-வுக்கு எதிரான போராட்டம் பெரும் கலவரத்துடன் முடித்து வைக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

போராட்டத்தை நிறுத்த 8 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனாலும் விவசாயிகள் தங்களின் கோரிக்கையிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இதனிடையே, 6 ஆவது கட்ட பேச்சுவார்த்தையின் போது வேண்டுமெனில் சட்டங்களைக் குறித்து ஆய்வு செய்ய ஆய்வு குழு அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதனை விவசாயிகள் தரப்பு ஏற்கவில்லை. சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தை முடிப்போம் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர்.

இதற்கிடையில், வரும் குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர். அதற்குத் தடைவிதிக்கக் கோரி டெல்லி போலீசாரால் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே, தற்போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உத்தரவின் ஒரு அம்சம் சட்டங்களை உடனே நடைமுறைபடுத்துவதற்குத் தடை. அதே சமயம், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தையைத் தொடர நால்வர் கொண்ட குழு என்பதே தீர்ப்பின் சாராம்சம். இந்த நால்வரும் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையின் படி வழக்கு விசாரணை தொடரும். இந்தக் குழுவுடன் விவசாயிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்றுதான் உச்ச நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.

உண்மையில், இந்தத் தீர்ப்பு மத்திய அரசு நினைத்ததையே நடத்தியுள்ளது. அதனாலேயே மத்திய அரசு உடனடியாக தீர்ப்பை வரவேற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ். மன், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வந்த் ஆகிய நால்வர் கொண்ட குழுவிலுள்ள அனைவருமே புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் என்றொரு செய்தியும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இதனை விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றியாக எப்படி கருத முடியும்?

வரும் குடியரசு தினத்துக்குள் எப்படியாவது போராட்டத்தை நிறுத்த வைக்க வேண்டும்; அதே சமயம், சட்டங்களை வாபஸ் பெறும் பேச்சுக்கும் இடமில்லை. இதுதான் மத்திய அரசின் தேவை. இத்தேவையினையே புதிய தீர்ப்பு நிறைவேற்றியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நால்வரும் புதிய சட்டங்களுக்குச் சாதகமாக ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தால், சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் பேச்சுக்கே இடமிருக்காது.

தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திவிட்டால், மீண்டும் இதுபோன்றதொரு போராட்டத்துக்கு அனைத்தையும் தியாகம் செய்து எல்லா சிரமங்களையும் எதிர்கொண்டு மக்கள் இறங்குவரா என்பது கேள்விக்குறி. ஆளும் தரப்புகள் எல்லாமே தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை எவ்வகையிலேனும் சிதைத்து, ஒடுக்கவே முனைகின்றன. மக்களின் நியாயமான போராட்டங்களுக்கான தீர்வு நீதிமன்றங்களின் பாரபட்சமற்ற செயல்பாட்டில் மட்டுமே குடிகொண்டுள்ளது.

விவசாயிகளின் நலனைக் குழிதோண்டி புதைக்கும் சட்டங்கள் மூன்றும் முழுமையாக ரத்து செய்வது மட்டுமே, இத்தனை நாட்கள் நீண்ட மக்களின் போராட்டத்துக்கான சரியான தீர்வாக இருக்கும். அதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதே யதார்த்தம்!


Share this News:

Leave a Reply