அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாசிச பாஜக!

Share this News:

பெருந்தொற்றில் சிக்கி நாட்டு மக்களும் நாடும் அலங்கோலப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய குள்ளநரித்தன வேலையில் மட்டும் கவனமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலுள்ள 13 மாவட்ட நிர்வாகங்கள் 1955 குடியுரிமை சட்டப்படி, குடியுரிமை சட்டவிதிகள் 2009 ன் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள சிறுபான்மையினர்களான இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, பார்ஸி மதத்தவர்களிடமிருந்து பதிவு மற்றும் நேச்சுரலைசேசன் அடிப்படையில் குடியுரிமைபெற விண்ணப்பங்கள் பெறலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானது. ஆச்சரியமாக, இதே உத்தரவை 2018 லும் ஒருமுறை மத்தியபிரதேசம், டெல்லி உட்பட ஆறு மாநிலங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்கட்சிகளோ, சி ஏ ஏ 2019 எதிர்ப்பாளர்களோ, ஊடகங்களோ பெரிதாக கண்டுகொள்ளாததும் ஆச்சரியமாக இருக்கிறது.
அடிப்படையில் இந்த உத்தரவு சட்டரீதியாக செல்லத்தக்கதா என்பதே கேள்விக்குறி.
ஏனெனில்,
1. 1955 குடியுரிமை சட்டமும் 2009 குடியுரிமை சட்ட விதிகளும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உரிய ஆவணங்களுடன் சட்டரீதியாக இடம்பெயர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி குறிப்பிடப்படுவதாகும். அதில், குறிப்பிட்ட அண்டை மாநிலங்களுக்கு மட்டுமென்றோ மதச்சிறுபான்மையினருக்கு மட்டுமென மதத்தை வைத்து பிரித்தோ எந்த ஷரத்தும் குறிப்பிடவில்லை.
2. மூன்று அண்டை நாடுகள் மற்றும் 6 மதச்சிறுபான்மையினருக்கு மட்டுமென குறிப்பிடும் அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரான ஷரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ல் தான் இடம்பெற்றுள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு, இதன் அடிப்படையிலான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு கொரோனாவைக் காரணம் காட்டி இதுவரை இந்த விதிமுறைகளை வகுக்கவில்லை. சாதாரணமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதனைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து நாடாளுமன்றத்தில் வைத்து 6 மாத காலத்துக்குள் ஒப்புதல் வாங்க வேண்டும். அக்கால அளவுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகம்/துறையால் விதிகள் வகுக்க முடியவில்லையேல் அதிகப்பட்சம் மூன்று மாத கால அளவுக்குக் கால அவகாசம் கேட்டு பெறலாம். 2019 ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்த நிலையில், இதுவரை அதற்கான விதிமுறைகளை வகுக்காமல் ஒன்றிய பாஜக அரசு மூன்று முறை கால அவகாசம் கேட்டு தள்ளி போட்டுள்ளது.
3. குடியுரிமை சட்ட விதி 2009 ன் படி, இந்தியாவில் சட்டரீதியாக குடியேறியவர்கள் தொடர்ச்சியாக 7 ஆண்டுகாலம் இந்தியாவில் குடியிருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும். 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் இதில் கீழ்கண்ட மாற்றத்தைச் செய்தது.
அ. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை.
ஆ. 2014 டிசம்பருக்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்த இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 6 மதத்தினர், எவ்வித ஆவணங்களும் இன்றியே குடியுரிமை பெறலாம். அதாவது, சட்ட விரோதமாக குடியேறியிருந்தாலும் இந்த மூன்று நாடுகளிலுள்ள 6 மதத்தவர்கள் எனில் அவர்களுக்குக் குடியுரிமை உண்டு.
இந்தச் சட்டத்துக்கு இன்னமும் விதிகளே வகுக்காத போது, 2009 சட்ட விதிகளில் இதனைக் கொண்டு வந்து நுழைப்பதற்குச் சட்டரீதியாக எந்த முகாந்திரமும் இல்லை. இதில் ஒன்றிய பாஜக அரசு சட்டரீதியாக பெரும் பிழையினைச் செய்துள்ளது. இதனைக் கேள்விக்குட்படுத்தி நீதிமன்றத்தில் வழக்குகள் பதியப்பட வேண்டும். எதிர்ப்பலைகள் எழ வேண்டும்.
ஆனால், துரதிஷ்டவசமாக இதனை யாருமே பெரிதாக கண்டுகொண்டது போல் தெரியவில்லை.
இவ்வாறான வெள்ளோட்டத்தை 2019 சட்டத் திருத்தம் நிறைவேற்றுவதற்கு முன்னர் 2018 லேயே செய்துள்ளதிலிருந்து ஒரு விசயம் யூகிக்க முடிகிறது.
கட்டம் கட்டமாக குறிப்பிட்ட மாநிலங்களையும் மாவட்டங்களையும் தேர்வு செய்து பாசிச பாஜக தம் அஜண்டாவைச் செயல்படுத்தி வருகிறது. அதில் எவ்வகையான எதிர்ப்புகள் வருகின்றன, சட்டரீதியாக எதிர்ப்புகள் வருகிறதா, நடைமுறைக்குக் கொண்டு வரும்போது எழும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பற்றி படிப்பதற்கும் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமே இவ்வாறு குறிப்பிட்ட மாவட்டம்/மாநிலங்களை மட்டும் தேர்வு செய்து நடைமுறைபடுத்துகிறது என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் 5 மாநிலங்களில் மூன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள். ஒரு மாநிலத்துக்குப் பக்கத்தில் குறிப்பிட்ட மூன்று அயல்நாடுகளில் எதுவுமே இல்லை.
இதிலிருந்து, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாதவற்றில் செயல்படுத்தினால் என்ன விளைவு வரும் என்பதையும் குறிப்பிட்ட அண்டை நாடுகளை எல்லையாக கொண்டிராத மாநிலங்களில் செயல்படுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் சோதிப்பதற்கே இம்முயற்சி என்றும் புரிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் எதிர்ப்பலையை உருவாக்கிய சி ஏ ஏ 2019, இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் வரப்போகிறது. அசந்திருந்தால் பாசிசம் நாட்டையே விழுங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!
நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் செயலாகும். வெளிநாடுகளில் குற்றமிழைத்துவிட்டு பிற நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குக் குடியுரிமையை உலகில் எந்த நாடுமே வழங்கியதில்லை.
சிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, நாட்டை எப்போதும் தம் கட்டுப்பாட்டில் வைக்கத் திட்டமிடும் பாசிசம் தம் ஓட்டு வங்கியை அதிகரிக்கச் சட்டவிரோத குடியேறிகளுக்குக் குடியுரிமை என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது.
சட்ட விரோதக் குடியேறிகள் எவருக்குமே குடியுரிமை வழங்கக்கூடாது. உரிய ஆவணம் இல்லாமல் வந்த அகதிகளுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு நன்னடத்தை அடிப்படையில் ஆய்வு செய்து மதம், இனம் பாராமல் குடியுரிமை வழங்க வேண்டும். இதுதான் இந்தியாவின் மாண்புக்கும் உகந்தது. அதற்கு வேட்டு வைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் பாசிசத்தை வீழ்த்த மக்கள் மதம், இனம், கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைய வேண்டியது கட்டாயம்!
அபூ சுமையா

Share this News:

Leave a Reply