குமரி மாவட்ட தொகுதிகள் நிலவரம்!

Share this News:

குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளன.
 
சட்டமன்றத் தொகுதிகள் – கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்.
 
நாடாளுமன்றத் தொகுதி – கன்னியாகுமரி
 
சிறுபான்மையின மக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுக்கு அதிகச் செல்வாக்கு இருக்கும் மாவட்டம். அதிமுகவைவிட திமுகவுக்கு அதிக ஆதரவுள்ள மாவட்டம். அதிமுக ஆதரவில் குறிப்பிட்ட அளவு தினகரனுக்கு ஓட்டுகள் பிரியும். முஸ்லிம்களிடையே எஸ் டி பி ஐ -க்கு ஓரளவு ஆதரவுண்டு. விஜயகாந்த் ரசிகர்களையும் கொண்டது. பாமகவுக்குப் பெரிதாக செல்வாக்கில்லை. ஆர் எஸ் எஸ் ஆதிக்கம் அதிகமுள்ள மாவட்டம் என்பதால் பாஜகவுக்குக் குறிப்பிட்ட இடங்களில் அதிக செல்வாக்குண்டு.
 
சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை,
 
கேரளத்தின் எல்லையில் வரும் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸுக்கும் அதிக செல்வாக்குண்டு. ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் அதிகமுள்ள தொகுதிகள். இம்முறை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக கூட்டணியாக இருப்பதால் இம்முறை எவ்வித சிக்கலும் இல்லாமல் இவ்விரு தொகுதிகளும் திமுக கூட்டணிக்குச் சொந்தமாகும்.
 
பத்மநாபபுரம் மற்றும் குளச்சல் தொகுதிகளைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள். அதிமுகவுக்கும் திமுகவுக்குமுள்ள ஆதரவில் சிறிய ஏற்ற, இறக்கமே உண்டு. எனினும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியில் இருப்பதால் திமுகவின் கை இங்கே ஓங்கியிருக்கும். அதிமுகவிலிருந்து அமமுகவுக்குப் பிரிந்து செல்லும் ஓட்டுகள் மற்றும் தேமுதிகவின் ஓட்டுகள் அதிமுக அணிக்கு மேலும் சரிவைக் கொடுக்கிறது. அதே சமயம், முஸ்லிம்களிலிருந்து எஸ் டி பி ஐ-க்கு அதிமுகவிலிருந்து பிரியும் ஓட்டுகளை ஈடுகட்டும் அளவுக்குப் பிரிந்தால் அது அதிமுகவுக்குச் சாதகச் சூழலைத் தரும். ஆனால், முஸ்லிம்களின் ஓட்டுகள் அந்த அளவுக்குப் பிரிவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் இவ்விரு தொகுதிகளிலும்கூட திமுக கூட்டணியே கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகம்.
 
நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளைப் பொறுத்தவரை எல்லா கட்சிகளுக்கும் சம அளவிலான செல்வாக்கு உள்ளது. எனினும், கூட்டணியைப் பொறுத்தவரை திமுக கூட்டணி மிகப் பலமானது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இரண்டும் இங்கே ஒன்றாக திமுக அணியில் நிற்பது இக்கட்சிகளின் நிரந்தர வாக்குகளை அப்படியே அள்ளித்தரும். இத்தொகுதிகளிலும் முஸ்லிம்கள் ஓரளவு அதிகம் நிறைந்து வாழ்கின்றனர். கிறிஸ்தவ நாடார் ஓட்டுகளும் அதிகம். தினகரன் அதிமுகவிலிருந்து பிரிக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை சதவீதத்துக்குத் தக்கவாறு திமுக கூட்டணியின் வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.
 
ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளும் திமுக கூட்டணிக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இதற்கு முந்தைய ஓட்டு சதவீதத்தைவிட கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெல்வது குமரி மாவட்டத் தொகுதிகளில் இருக்கலாம்.
 
நாடாளுமன்றத் தொகுதி நிலவரத்தைப் பொறுத்தவரை….
 
இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறியும் காங்கிரஸ் அதிக முறையும் வெற்றிபெற்ற தொகுதி. பாஜகவும் வென்றுள்ளது. கடந்தமுறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வென்ற வசந்த குமார் இறப்புக்குப் பின்னர், அவரின் மகனுக்கே காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர் மீது பெரிய அளவில் வெறுப்பேதும் இல்லை. அதே சமயம், கட்சி கடந்து பாஜகவின் ராதா கிருஷ்ணன் மீதும் சிலருக்கு நல்லெண்ணம் உள்ளது. மத்திய அமைச்சராக குமரிக்குச் சமீபத்தில் பாலங்கள் கொண்டு வந்தது, பலரின் ஆதரவைப் பெற்று தந்துள்ளது.
 
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் ஓட்டு வங்கியும் நாடார் சமூகத்தின் ஓட்டு வங்கியும் கூடுதலாக திமுக, முஸ்லிம் ஓட்டுகளும் காங்கிரஸுக்குப் பலம் எனில், அதிமுக-பாஜக அரசுகளின் மீதான மக்களின் விமர்சனத்தைக் கடந்து திரு. ராதா கிருஷ்ணன் மீது கட்சி கடந்து மக்களுக்கு இருக்கும் நல்லெண்ணம் அவருக்கான பலம்.
 
ஆனால், கல்வியறிவு அதிகமுள்ள மாவட்ட மக்களிடையே சமீபத்திய சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பாஜகவின் தன்னிச்சையான கடும் போக்குகளும் நிச்சயமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது, திரு. ராதா கிருஷ்ணனின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும்.
 
எனவே, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியைக் காங்கிரஸ் தக்க வைப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

Share this News:

Leave a Reply