டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – முதல்வர் அறிவிப்பு!

Share this News:

சென்னை (09 பிப் 2020): டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, விவசாய பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்… பேராசை பிடித்த நபர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை பொதுநலனுக்கு பயன்படுத்துவது கிடையாது. இந்த அரசின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில், நடுவே நல்ல பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே நமக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்ற பயத்தின் காரணமாக தினமும் வாயைத் திறந்தால் பொய் பேசி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.

உதாரணத்திற்கு நெடுவாசல் பிரச்சனை. என்ன தான் மத்திய அரசு திட்டம் கொண்டுவந்தாலும் மாநில அரசு தடையில்லா சான்று அளிக்காமல் அங்கு பணிகளை தொடங்க முடியாது. அது அனைவருக்கும் தெரியும், எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியும். மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அம்மா அரசு ஒரு போதும் அதற்கு தடையில்லா சான்று வழங்காது என்று சட்டசபையிலும் வெளியிலும் நான் பலமுறை அறிவித்துள்ளேன்.

டெல்டா பகுதிகள் கடல் நீர் சார்ந்த பகுதியாக இருக்கிறது. எனவே கடல் உப்பு நீர் உள்ளே புகுந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை பாதுகாக்க வேண்டியது அவசியம். கரிகால் பெருவளத்தான் காலத்துக்கு முன்பு இருந்த தமிழரின் உணர்வுடன் கலந்துள்ள காவிரி டெல்டா பகுதியை பாதுகாத்திட ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இந்த விவசாய பெருவிழாவில் நான் அறிவிக்க விரும்புகிறேன். தமிழகத்தின் நெற்களஞ்சியம், காவிரி டெல்டா பகுதி. எனவே, தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Share this News:

Leave a Reply