தீவிரமாக மாறும் மாண்டஸ் புயல்!

Share this News:

சென்னை (08 டிச 2022): நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.

இன்று காலை 0830 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு 460 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்று இரவு வரை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, நாளை காலை முதல் மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் 09.12.2022 மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

புயல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply