தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம்!

மதுரை (29 ஜன 2020): தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில், 23 ஆண்டுகளுக்கு பின்னர், வரும் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழா, பூர்வாங்க பூஜையுடன் நேற்று (ஜன.,27) துவங்கியது.

இதற்கிடையே, கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் நடத்தகோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல், தொல்லியல் துறையின் அனுமதி பெறாததால் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனுவும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று (ஜன.,27)நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் போது, கடந்த நவம்பர் மாதமே 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை வாதிட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கும்பாபிஷேகத்தை தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் நடத்தப்படும். இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கும்பாபிஷேகம் என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், கும்பாபிஷேகத்திற்கு தடைக்கோரிய வழக்கையும் முடித்து வைத்தது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply