பிக்பாஸுக்காக பொய் – காதல் டு நிச்சயதார்த்தம்: தர்ஷன் சனம் ஷெட்டி பரபரப்பு பின்னணி!

Share this News:

சென்னை (01 பிப் 2020): நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் செய்ய மறுக்கிறார் என்று பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வருடம் பங்குபெற்றார் இலங்கைத் தமிழர் தர்ஷன். பட்டத்தை வெல்லக் கூடியவர் எனப் போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் கருதப்பட்ட தர்ஷன், கடைசி வாரத்துக்கு முன்பு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறிய தர்ஷன், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு தன்னை ஏமாற்றுவதாகப் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தர்ஷன் விளக்கம் அளித்ததாவது:

நேற்று என் மீது சனம் ஷெட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதற்கான விளக்கத்தை அளிக்கிறேன்.

சினிமாவில் நடிப்பதற்காக 2016-ல் சென்னைக்கு வந்தேன். 8 விளம்பரங்களிலும் 3 படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்தேன். ஒரு படத்தில் வில்லன் வேடம் வந்தது. 2017 மார்ச்சில் பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்தின்போது சனம் ஷெட்டியைச் சந்தித்தேன். பிறகு, ஃபேஸ்புக்கில் என்னைச் சேர்த்துக்கொண்டார். என் விளம்பரங்களுக்கு அவ்வப்போது பாராட்டுத் தெரிவிப்பார். நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறேன். அந்தப் படத்தில் ஹீரோ ஆடிஷனுக்கு வருகிறீர்களா என ஒருமுறை கேட்டார். இயக்குநர், சில தேர்வுகளுக்குப் பிறகு என்னைக் கதாநாயகன் ஆக்கினார். பிறகுதான் சனம் ஷெட்டி என்னிடம் சொன்னார், நான் தான் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் என்று. அப்படத்துக்கு 35 நாள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அவருக்கு காதல் ஒன்று இருந்து, அது முறிகிற நிலையில் இருந்தது. 2018 ஜனவரியில் இருந்துதான் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். அப்போது அவர் இரு படங்களில் நடித்து வந்தார். எனக்கு இப்போதுதான் வாய்ப்புகள் வருகின்றன. எனவே நம் காதலை வெளியே சொல்லவேண்டாம் என்றார். எனக்கும் அது சரியாக இருந்தது.

படம் பாதியில் நின்றதால் நான் 8 மாதங்கள் இலங்கையில் இருந்தேன். பிறகு விசா வாங்க தேவையான ஆவணங்களை சனம் ஷெட்டி நிறுவனத்திலிருந்து அளித்தார்கள். ஒவ்வொரு மாதமும் ஆஸ்திரேலியாவில் உள்ள என் அண்ணன் எனக்குப் பணம் அனுப்புவார். சனம் எனக்குப் பண உதவி செய்யவில்லை. ஆனால் பட, விளம்பர வாய்ப்புகளுக்கு உதவி செய்தார். அதை நான் எப்போதும் மறுக்க மாட்டேன். அந்த நன்றி அவர் மீது உள்ளது.

அவருடைய பிஆர்ஓ, இருவருடைய ஃப்ரொஃபைல்களையும் பிக் பாஸுக்கு அனுப்பினார். இரண்டு படங்களில் நடித்தவர்களுக்கு மட்டும்தான் பிக் பாஸில் வாய்ப்பு என்பதால் தர்ஷனை அவர்கள் தேர்வு செய்யவில்லை. சனம் 15 படங்களில் நடித்ததால் அவருக்கு வாய்ப்புள்ளது என்று பிஆர்ஓ தகவல் தெரிவித்தார். ஆறு மாதம் பிக் பாஸ் தேர்வுகளுக்கான வேலை நடந்துகொண்டிருந்தது. நான் நடித்த போத்தீஸ் நிறுவன விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற ஒரு மாடல் வேண்டும் என்று என்னைத் தேர்வு செய்தார்கள். இத்தகவல் விஜய் டிவி மூலமாக எனக்கு வந்தது. என்னுடைய நண்பரும் பாடகியுமான ரம்யா மூலமாக என் தொலைப்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டுப் பேசினார்கள். இது எனக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் நடந்தது. எனவே, நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று நீ அவர்களிடம் சொன்னால் என்னைத் தேர்வு செய்யமாட்டார்கள். நாங்கள் நண்பர்களாகத்தான் உள்ளோம், நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் எல்லாம் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று விஜய் டிவியிடம் சொல் என்று சனம் கூறினார். பிறகு விஜய் டிவி இண்டர்வியூவில், நானும் சனம் ஷெட்டியும் நண்பர்கள் என்றுதான் நான் சொன்னேன்.

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, அழைப்பிதழ் அடித்து அவர் திருமணத்துக்குத் தயாரானது எனக்குத் தெரியாது. நிச்சயதார்த்தம் என் வீட்டுக்குத் தெரியக்கூடாது என நினைத்தேன். எனக்கு ஒரு தங்கை உள்ளார். அவருக்குக் கல்யாணம் ஆகும்வரைக்கும் எனக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் ஆனது என் பெற்றோருக்குத் தெரியக்கூடாது. இது உங்களுக்குச் சரி என்றால் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்று சனத்தின் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் அதற்குச் சரி என்றார்கள். பிக் பாஸ் முடிந்தபிறகு என் அம்மாவுக்கு போன் செய்து நிச்சயதார்த்தம் குறித்துச் சொன்னேன்.

எனக்கும் சனத்துக்கும் அவ்வப்போது சண்டைகள் நடக்கும். உன்னால் தான் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்கவில்லை. நமக்கு நிச்சயம் ஆனது தெரிந்ததால் தான் என்னை பிக் பாஸுக்கு அழைக்கவில்லை என்பார். இண்டர்வியூவில் நாங்கள் நண்பர்கள் என்றுதான் சொன்னேன் என அவருக்கு விளக்கம் அளிப்பேன். நான் பிக் பாஸுக்குத் தேர்வான பிறகும் அதில் நுழைய சனம் ஷெட்டி மிகவும் முயற்சி எடுத்தார். சனத்தின் உறவினர் ஒருவர் அரசியல் பின்புலம் கொண்டவர். அவரை வைத்து பிக் பாஸுக்குள் நுழைய முயற்சி எடுத்தார். வைல்ட் கார்டில் நான் உள்ளே வர வாய்ப்பு உள்ளது என்றார். அதனால் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்தேன். மீராவுடனான சர்ச்சை வந்தபிறகு தான், எனக்கு வெளியே கேர்ள் ஃபிரெண்ட் உள்ளார் என நிகழ்ச்சியில் முதல்முறையாகச் சொன்னேன்.

அவர் பிகினி போட்டுக்கொண்டு கொடுத்த பேட்டி எனக்குப் பிடிக்கவில்லை. நான் உன்னுடைய விளம்பரத்துக்காகத்தான் செய்தேன் என்றார். நான் இதைக் கேட்கவேயில்லையே என்றேன். பிக் பாஸுக்குள் போகும் முன்பு என்னுடைய இன்ஸ்டகிராமின் ஐடி, பாஸ்வேர்டு கேட்டார். அதை நான் என் அண்ணன், தங்கையிடம் தான் கொடுத்தேன். விஜய் டிவியின் விளம்பரங்களை மட்டும் அதில் பகிருங்கள் என்று அவர்களிடம் கூறியிருந்தேன். ஆனால் நான் பிக் பாஸுக்குள் போனபிறகு, என்னுடைய இன்ஸ்டகிராம் ஐடி, பாஸ்வேர்டைத் தரச் சொல்லி என் அண்ணனிடம் கேட்டுள்ளார். நான் தரச் சொன்னதாகவும் கூறியுள்ளார். ஆனால், என் அண்ணன், இன்ஸ்டகிராம் விவரங்களைத் தர மறுத்துள்ளார். பிறகு என் தங்கையிடம் தொடர்ந்து வற்புறுத்தியதால் அவர் கொடுத்துவிட்டார். பிக் பாஸை விட்டு வெளியே வந்தபிறகு என் ஃபேஸ்புக்கை ஒரு மாதம் பயன்படுத்தியது சனம் தான். பிக் பாஸிலிருந்து வெளியே வந்தபிறகு பிக் பாஸ் பெண் போட்டியாளர்களிடம் பேசாதே, இன்ஸ்டகிராமில் ஃபாலோ பண்ணாதே என்றார். நீ எங்கே சென்றாலும் என்னையும் அழைத்துச் செல் என்றார்.

நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் இந்தக் கதாநாயகியை நடிக்க வை என்றார். இப்படித்தான் சண்டை ஆரம்பமானது. உனக்குப் புகழ் அதிகமாகிவிட்டது. இப்போது நம் திருமணம் குறித்து மக்களிடம் சொல்லிவிடு என்றார். நான் பண்ணமாட்டேன், இருவரும் ஏற்கெனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது என்றேன். எனக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார் சனம். எனக்கு 3 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படத் தயாரிப்பாளர்களிடம் சென்று அவரை ஏன் நடிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போதுதான் அவருடனான காதலை முறிக்கவேண்டும் என முடிவெடுத்தேன். பைக்கை விற்று சினிமாவில் நடிக்க வந்தவன் நான். ஆனால் இந்தக் காதலால் நடிக்க முடியாத நிலை உருவாகும் என்றால் அந்தக் காதலே வேண்டாம் என்றேன். உடனே, நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். அப்படி அவர் சொன்ன மெசேஜ்கள் எல்லாம் என்னிடம் உள்ளன. இதற்குப் பிறகு எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. பிறகு இலங்கைக்குச் சென்று என் பெற்றோரைச் சந்தித்தார்.

தர்ஷனுக்கு ஒரு தங்கை உள்ளது. அவர் திருமணத்துக்குப் பிறகு நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மட்டும்தான் என் அம்மா அவரிடம் சொன்னார். சனம் நேற்று சொன்னதுபோல என் அம்மா பேசவில்லை.

வரி விஷயமாக எனக்கு சனம் மூன்றரை லட்சம் கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தப் பணத்தை அவர் நிறுவனத்துக்கு நான் அளித்துவிட்டேன். நிச்சயதார்த்தத்துக்கு அவர் இரண்டரை லட்சம் செலவழித்தார். வேறு எந்தப் பண உதவியும் அவர் செய்யவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலரிடம் எனக்குத் தொடர்பு உண்டு எனச் சந்தேகப்பட்டு அவர்களிடம் பேசியிருக்கிறார் சனம். எனவே நான் அல்ல, அவர் தான் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

நான் பிக் பாஸுக்குள் இருந்தபோது பாடகி ரம்யாவின் திருமணத்துக்குச் சென்று தன்னுடைய பழைய காதலருடன் இரவில் பார்ட்டியில் இருந்துள்ளார். இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. பிக் பாஸுக்குப் பிறகு எனக்கு நிறைய பெண்களிடம் தொடர்பு உள்ளது என அவர் சொல்கிறார். அது உண்மை என்றால் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்.

பிக் பாஸை விட்டு வெளியே வந்தவுடன், எனக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் ஆனதை ஷெரினிடம் சொல்லிவிட்டேன். ஷெரினும் இதுவரை சனம் பற்றி தவறாகப் பேசியதில்லை. நிச்சயதார்த்தம் பற்றி ஷெரினிடம் சொன்னவுடன், அப்படியென்றால் நான் உன்னிடம் இனி பேசவேயில்லை. நட்பு கூட வேண்டாம் என்றார் ஷெரின். ஆனால், ஷெரினால் தான் எங்கள் காதல் முறிந்ததாக சனம் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஷெரின், என்னுடைய நண்பர் மட்டுமே என்று சனத்திடம் நான் பலமுறை கூறியுள்ளேன். சனம் சொன்னதால் தான் இன்ஸ்டகிராமில் ஷெரினை அன்ஃபோலோ செய்தேன். எங்கள் இருவருக்குமிடையே பிரச்னை உள்ளது என்று தெரிந்தது முதல் ஷெரினும் என்னிடம் பேசுவதில்லை.

சனம் ஷெட்டிக்குப் பல கதாநாயகர்களிடம் தவறான உறவு உள்ளது என்று நான் கூறவில்லை. இவ்வளவு நடந்த பிறகு, என்னால் சனம் ஷெட்டியைத் திருமணம் செய்யமுடியாது. இன்னொரு நாட்டிலிருந்து என் நாட்டுக்கு நடிக்க வந்துள்ளாய், என் நாட்டுக்கு வந்து என்னையே இப்படிச் செய்கிறாயா, நான் உன்னை வளர விடுகிறேனா என்று பார் என அவர் என்னை மிரட்டிய வாட்சப் மெசேஜ்கள் என்னிடம் உள்ளன. அவர் சொன்னதுபோல எனக்கு சென்னையில் எந்தப் பின்புலமும் இல்லை. எல்லா வாய்ப்புகளும் பல முயற்சிகளுக்குப் பிறகுதான் கிடைக்கின்றன.

சனம் ஷெட்டி மீது நான் வழக்கு தொடுக்கமாட்டேன். அவர் எனக்கு நிறைய உதவியுள்ளார். அந்த நன்றியை மறக்கமாட்டேன்.

பிரச்னையைச் சரி செய்ய மூன்று மாதங்களாக அவரிடம் பேசிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டிய பிறகுதான் பேசுவதை நிறுத்தினேன். என் பட வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோதுதான் இப்படி முடிவெடுத்தேன். மீடியாவில் அவரைப் பற்றி மேலும் சொல்வதை விடவும் காவல்துறை அழைத்தால் எல்லா ஆதாரங்களையும் வெளிப்படுத்துவேன். நான் வேறொரு பெண்ணைக் காதலிப்பதால் தான் சனம் என் மீது இப்படிக் குற்றம் சுமத்துகிறாரா எனக் கேட்கிறீர்கள். ஒரு பெண்ணை நான் காதலித்ததற்கே இத்தனை பிரச்னைகள் வந்துள்ளதே என்று தர்ஷன் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply