ஒரே நாளில் சென்னையை அதிர வைத்த இரண்டு சம்பவங்கள்!

Share this News:

சென்னை (15 ஜன 2020): ஒரே நாளில் இரண்டு கொலை சம்பவங்கள் சென்னையை அதிர வைத்துள்ளன.

சென்னை மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூர், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28), பெயின்டர் மற்றும் வாகனங்களைப் பறிமுதல் செய்யும் வேலை செய்துவந்தார். நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் உறவினர்கள் யுவராஜைத் தேடினர். அப்போது கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதைப்பார்த்த யுவராஜின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், யுவராஜின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் யுவராஜ், மனைவியைப் பிரிந்து வாழ்ந்துள்ளார். அதனால் மனைவி குடும்பத்தினருடன் யுவராஜிக்கு முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. கொலை நடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும், யுவராஜை வெட்டி கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளும் அந்தப்பகுதியில் கிடந்தது. அதைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மற்றொரு சம்பவம், சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். சமையல் தொழில் செய்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிரவு இருவரும் சேர்ந்து மதுஅருந்தினர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த லோகேஷ், நண்பன் மோகனின் கால் நரம்பை வெட்டினார். போதையிலிருந்த மோகனுக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் அங்கிருந்து நடந்து சென்றார்.

சிறிது தூரம் நடந்து சென்ற மோகன், கீழே விழுந்தார். கால் நரம்பு வெட்டப்பட்டு ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீஸார் விரைந்துவந்தனர். மோகனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகனைக் கொலை செய்த குற்றத்துக்காக லோகேஷை கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply