எட்டாயிரம் வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் – ஸ்டாலின் ஆவேசம்!

Share this News:

சென்னை (26 டிச 2019): எங்கள் மீது எட்டாயிரம் வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் கடந்த திங்களன்று திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரம் போலீசார், கலவர தடுப்பு வாகனங்கள் உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற 8 ஆயிரம் பேர் மீது, சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘எப்போதுமே அரசுக்கு கணக்கு கொடுக்ககூடியவர்கள், அதில் பாதியாக குறைத்துத்தான் தருவார்கள். எதிர்க்கட்சிகள் நடத்துகிற ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், பேரணியாக இருந்தாலும் எண்ணிக்கையை குறைத்துத்தான் தருவார்கள். ஆக, எது எப்படி இருந்தாலும் 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் கூட அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.


Share this News:

Leave a Reply