பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் விமர்சனம்!

Share this News:

சென்னை (14 பிப் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையாற்றினார்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ” சபாநாயகர் ஏன் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருக்கிறது. அந்த 11 பேரில் ஒருவராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட் உரையைப் படித்திருக்கிறார்.

ஏறக்குறைய 196 நிமிடங்கள் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்திருக்கிறார். மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். மத்திய பா.ஜ.க அரசை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

பட்ஜெட் புத்தகத்தின் மூன்றாவது பக்கத்தில் இருக்கும் செய்தியை வாசித்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி நீடிக்காது என்று கூறிவந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது சமாதிக்குச் சென்று தியானம் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னது, அரசை எதிர்த்து சட்டப்பேரவையில் வாக்களித்தது, அதுதொடர்பான வழக்கு இன்று விசாரணையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் இது பத்தாவது பட்ஜெட். பத்தாவது பட்ஜெட் எவருக்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை ஆகியவை தான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 – 2021ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.4,56,660 கோடி கடன் சுமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் தலையிலும் ரூ. 57,000 கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் கடன் சுமை என்பது ஒரு லட்சம் கோடி தான். அதாவது, கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவந்த நிலை அது. இந்த 9 ஆண்டுகளில் கடன் சுமை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

அரசு நிறுவனங்கள் முதல் தேர்வாணையம் வரை, தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கடனில்தான் மூழ்கியிருக்கிறது. கடனில் மட்டுமல்ல மோசடியிலும், ஊழலிலும் திளைக்கிறது.

இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை; வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. முதலமைச்சரின் துறை, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் துறைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பது மர்மமாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply