ஜனநாயக ரீதியான போராட்டங்களை சீர்குலைக்கும் காவல்துறை: எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஜனநாயக வழியில் போராடும் மக்கள் மீது காவல்துறை நடத்திய அராஜகம் கண்டிக்கத்தக்கது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் காவல்துறை அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றது.

பெண்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்களை தரதரவென இழுத்து அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை காவல்துறை மேற்கொண்டுள்ளது. அவர்களை கைது செய்து வாகனத்திலும் வைத்து காவல்துறையினர் தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை சீர்குலைப்பதை காவல்துறை நிறுத்த வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதோடு, மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்து நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply