காயல்பட்டினம் மக்கள் அடித்த ரிவீட்டு – அதிராம்பட்டினம் மக்களுக்கு ட்ரீட்டு!

Share this News:

அதிராம்பட்டினம் (24 ஜன 2020): காயல்பட்டினம் மக்கள் ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில் அதிராம்பட்டினம் தனியார் வங்கி வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு விருந்து வைத்து உபரசிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக வங்கியின் பேங்க் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் இவற்றில் ஏதேனும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் பகுதியில் உள்ள மக்கள் தேசிய மக்கள் வங்கியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்காக வங்கியில் குவிந்தனர். உடனே பதறி அடித்துக் கொண்டு வங்கி நிர்வாகம் சார்பில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும், தேசிய மக்கள் பதிவேடு தான் கட்டாயமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக காயல்பட்டினம் மக்கள் அறிவித்தனர்.

குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட காரணங்களால் நாடே கொந்தளித்துள்ள நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் கதையாக வங்கிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது இப்படியிருக்க வெளிநாட்டு முதலீடு, அந்நிய செலாவணியால் இலாபம் சம்பாதிக்கும் வங்கிகளில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் வங்கிகளும் அடக்கம்.

இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்று என் ஆர் ஐ சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை வெள்ளிக்கிழமை (24 – 01 -2020) ஏற்பாடு செய்துள்ளது. மேலும் உயர் தர உணவகத்தில் விருந்து உபசரிப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

காயல்பட்டினம் மக்கள் போல் எதுவும் அவசர முடிவு எடுத்துவிடக் கூடாது என்ற அச்சமே இந்த ஏற்பாடு என்பதாக பொதுமக்களிடையே விவாதமாகியுள்ளது. மேலும் எப்போதும் இல்லாத வகையில் இப்போது மட்டும் இந்த அழைப்பு ஏன்? என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply