தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

Share this News:

கும்பகோணம் (22 நவ 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (37) மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது.

இதையடுத்து தன் வீட்டின் முன்பு யாரோ பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்று விட்டதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் சக்கரபாணி. அத்துடன் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீஸார் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சக்கரபாணி வீட்டின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி., ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய் டாபி அழைத்து செல்லப்பட்டு துப்பறியும் பணியில் ஈடுபட வைத்தனர். டாபி கொஞ்ச துாரம் மட்டுமே ஓடி நின்று விட்டது.

வீட்டு வாசலில் உடைந்து கிடந்த பாட்டிலை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து அதில் பதிந்திருந்த கைரேகையை சோதனை நடத்தினர்.இந்த நிலையில் மண்ணெண்ணை வாசனையுடன் ஒரே இடத்தில் பாட்டில் உடைந்து கிடந்ததால் போலீஸாருக்கு சக்கரபாணி மீதே சந்தேகம் ஏற்ப்பட்டது. இதையடுத்து அவரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதில், தனக்கு விளம்பரம் கிடைக்கும் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு தருவார்கள் என்பதால் தானே பாட்டிலில் மண்ணெண்ணை ஊற்றி உடைத்து விட்டு பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக நாடகமாடினேன் என போலீஸிடம் ஒப்புக் கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this News:

Leave a Reply