வரலாற்றில் எழுதப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று ‘சர்வ தர்ம சமா பவா’ (அனைத்து மதத்தினருக்கும் ஒரே கொள்கை) என்ற பல மதங்களின் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தங்கள் குரலைப் பதிவுசெய்துள்ளனர்.

நேற்றைய கூட்டத்தில், இந்துக்கள் யாகம் நடத்தினர், சீக்கியர்கள் கிர்தான் (இசை, பாடல் மூலம் இறைவனை வழிப்படுதல்) செய்தனர். அதேபோல், அனைத்து மதத்தினரும் தங்கள் முறைகளில் இறைவனை வழிபட்டு குடியுரிமை சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இறுதியாக, அனைவரும் இணைந்து அரசியலமைப்பின் முன்னுரையைப் படித்து, நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காலை முதலே, நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே கூடியிருந்த அந்தப் பகுதி, பிற்பகலுக்குப் பிறகு ஆயிரத்துக்கும் மேலாக அதிகரிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரும் இதில் கலந்துகொண்டு, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தனது கருத்தைக் கூறினார்.

‘சர்வ தர்ம சமா பவா’ என்ற போராட்ட பிரார்த்தனைக் கூட்டம், முன்னதாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது பல இடங்களில் நடைபெற்றது. மகாத்மா காந்தி, இந்தப் போராட்டத்தை அனைத்து இடங்களிலும் பரப்பினார்.

பெரியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதே இடத்தில், குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜைனுல் ஆபிதின் என்ற 44 வயது நபர், கடந்த டிசம்பர் 16-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார். இதே போன்ற மற்றொரு கூட்டம், டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியிலும் நடைபெற்றுள்ளது.


Share this News:

Leave a Reply