லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

Share this News:

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

லண்டன், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார்.

பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த தேஜஸ்வினி, அங்கேயே தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார். அவர் லண்டனின் வெம்ப்லே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேஜஸ்வினியின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ என்ற 23 வயது இளைஞர் தேஜஸ்வினியையும், அவருடன் தங்கியிருந்த பெண்ணையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் தேஜஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றொரு பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரேசில் நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இளைஞரையும் கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Share this News: