பொது சிவில் சட்டம் – மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தோல்வி!

Share this News:

புதுடெல்லி (09 டிச் 2022): : சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது.

பாஜக எம்பி கிரோடி லால் மீனா, பொதுசிவில் சட்ட மசோதாவை தனிப்பட்ட மசோதாவாக அறிமுகப்படுத்த அனுமதி கோரினார். ஒப்புதலுக்கு வாக்களிக்க ராஜ்யசபா சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இறுதியாக, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முன்னதாக பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களாவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதில் எதிர்ப்புகளுக்கு எதிராக வாதிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கொள்கைகளின் கீழுள்ள ஒரு பிரச்னையை எழுப்புவது என்பது உறுப்பினரின் சட்டப்பூர்வமான உரிமை. இந்த விஷயம் சபையில் விவாதிக்கப் படட்டும். இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவது, மசோதாவை விமர்சிக்க முயல்வது தேவையற்றது” எனக் கூறினார்.

இதை எதிர்த்த கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ், “பொது சிவில் சட்டம் அவசியமில்லை” என்று கூறிய சட்ட கமிஷனின் அறிக்கையைக் குறிப்பிட்டார். அதோடு தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், “பொது சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது” என எதிர்த்தார்.

மேலும், பல எதிர்க்கட்சிகளும் இந்தத் தனிநபர் மசோதாவை எதிர்த்தன. அதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜக்தீப் தன்கர், தனிநபர் மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 23 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 63 பேர் எதிராகவும் வாக்களித்ததன் மூலம் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ​​எதிர்க்கட்சி வரிசையில் பல உறுப்பினர்கள் இல்லை. பெரும்பான்மை காங்கிரஸ் எம்பிக்கள் சபையில் இல்லாததை, முஸ்லீம் லீக் எம்பி அப்துல் வஹாப் சுட்டிக் காட்டி விமர்சித்தார்.


Share this News:

Leave a Reply