டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர் மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

Share this News:

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி கலவரத்தை தூண்டியதாக பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கபில் மிஸ்ரா. ஜாஃபர்பாத் பகுதியில் உள்ள மௌஜ்பூர் சௌக்கில் சிஏஏ-வுக்கு ஆதரவான குழுவினரை கபில் மிஸ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிநடத்தினார். இதன்பிறகே, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் கெடு விதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்தார். அதில், “ஜாஃப்ராபாத் மற்றும் சந்த் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த டெல்லி காவல் துறையினருக்கு மூன்று நாள் வழங்கப்படுகிறது. இதன்பிறகும், காரணம் கூறி நியாயப்படுத்த முயற்சிக்காதீர், நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்” என்றார்.

மேலும் வீடியோவுடன் கூடிய பதிவில் அவர் குறிப்பிடுகையில், “டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருக்கும் வரையே நாங்கள் அமைதி காப்போம். அதற்குப் பிறகும் சாலைகள் திறக்கப்படவில்லை என்றால் காவல் துறையினர் சொல்வதைக்கூட கேட்க மாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்” என்றார்.

அவர் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே கலவரம் மூண்டது. இந்நிலையில் டெல்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு வரவுள்ளன.

பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் ஆசாத் மற்றும் முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜஹத் ஹபிபுல்லாஹ் மற்றும் பலர் இத்தகைய மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களது மனுக்களில்டெல்லி வன்முறை தொடர்பாக 23-ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போதும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சமூக விரோதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இங்குள்ளவர்களைத் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஷஹீன் பாக் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு பல்வேறு விதமான மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக புதனன்று விசாரிக்கத் திட்டமிட்டுள்ள ஷஹீன் பாக் தெடர்பான இரண்டு மனுக்களுடன் இந்த மனுக்களையும் இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

இந்த மனுக்களை அவசர மனுக்களாக விசாரிக்க கோரி நீதிபதிகள் சஞ்சய் கிசன் கவுல் மற்றும் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது.


Share this News:

Leave a Reply