குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வரின் அடுத்தடுத்த அதிரடி!

Share this News:

திருவனந்தபுரம் (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மாநில அரசுகளில் கேரள அரசு முதன்மை வகிக்கிறது.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ, அதோடு சேர்ந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) – தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றையும் செயல்படுத்த மாட்டோம் என அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதில் கேரள மாநிலம் ஒன்றுபட்டு முன்னணியில் இருந்து வருகிறது. சி.ஏ.ஏ-வை எதிர்ப்பதில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கூட எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்கையில், கேரளாவில் பா.ஜ.க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனே கேரளாவின் ஆளும் சி.பி.எம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டன. முதல்வர் பினராயி விஜயன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியிருந்தார். அப்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் பேசியதோடு கேரளாவில் சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்ததோடு மத்திய அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

கேரளாவைத் தொடர்ந்து மற்ற மாநில சட்டப்பேரவைகளும் சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 11 முதலமைச்சர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தார் பினராயி விஜயன். இதைப் பாராட்டியிருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசும் இதைப் பின்பற்றி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அ.தி.மு.க அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது அடுத்த அதிரடியாக சி.ஏ.ஏ-வை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. சி.ஏ.ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற முதல் மாநில அரசாகக் கேரள அரசு இருக்கிறது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுமே சி.ஏ.ஏ-வை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒரு மாநில அரசு செய்வது இதுவே முதல்முறை.

மத்திய அரசின் அதிகாரத்தில் வரக்கூடிய ஒரு சட்டத்தை மாநில அரசு எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கும், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாட்டுக்கு எதிராகவும் இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 131-ன் கீழ் இந்த வழக்கை கேரள அரசு தொடுத்துள்ளது. பிரிவு 131-ன் கீழ் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான விஷயங்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் இந்த மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply